வணிகம்

2 தனியார் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க லைசென்ஸ்

செய்திப்பிரிவு

ஐடிஎப்சி லிமிடெட் மற்றும் பந்தன் நிதிச் சேவை (பி) லிமிடெட் ஆகிய தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

வங்கி தொடங்குவதற்கு மொத்தம் 27 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. கடைசி நேரத்தில் 2 நிறுவனங்கள் தங்கள் முடிவை வாபஸ் பெற்றன. இதனால் 25 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. தேர்தல் தேதி வெளியானதால், இதுகுறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்தை ரிசர்வ் வங்கி அணுகியிருந்தது. கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி எடுக்கலாம் என செவ்வாய்க்கிழமை மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இரண்டு நிறுவனங்களுக்கு வங்கி தொடங்க கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கி அளித்துள்ள லைசென்ஸ் அனுமதி 18 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ள வழிகாட்டு நெறிகளை இவ்விரு நிறுவனங்களும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான லைசென்ஸ் வழங்கப்படும் வரை இந்நிறுவனங்கள் வங்கிச் சேவையில் ஈடுபடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பித்துள்ள இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் விண்ணப்பத்தை அரசுடன் கலந்து பேசி பரிசீலிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி தொடங்குவது தொடர்பாக புதிதாக வழிகாட்டு நெறிகளை ஆர்பிஐ வெளியிட உள்ளது. அதன் பிறகு இப்போது விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

கட்டமைப்புகளுக்கு நிதி அளிக்கும் நிறுவனமாக ஐடிஎப்சி திகழ்கிறது. சிறு தொழில் நிறுவனங்ளுக்கு கடன் அளிக்கும் நிறுவனமாக பந்தன் நிதிச் சேவை நிறுவனம் விளங்குகிறது. சிறு, குறுந்தொழில் துறைக்கு கடனுதவி அளிப்பதில் ஈடுபாடுகாட்டி கடுமையாக பாடுபட்டதற்கு கிடைத்த வெற்றிதான் வங்கி தொடங்க லைசென்ஸ் கிடைத்திருப்பது என்று பந்தன் நிதிச் சேவை நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் கோஷ் தெரிவித்தார். யுனிவர்சல் வங்கிச் சேவைக்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இன்றிலிருந்து அயராமல் உழைக்கத் தயாராகிவிட்டதாகவும் ஐடிஎப்சி தலைவர் ராஜிவ் லால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT