வணிகம்

ஐடிசி குழும தலைவர் ஒய்.சி.தேவேஸ்வர் காலமானார்

செய்திப்பிரிவு

பிரபல தொழிலதிபரும் ஐடிசி குழும தலைவருமான யோகேஷ் சந்தர் தேவேஸ்வர் உடல்நலக் குறைவால் இன்று காலை  காலமானார். அவருக்கு வயது 72.

உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஐடிசி குழுமத்தில் 1968-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த தேவேஸ்வர், 1984-ல் இயக்குநர் ஆனார். ஜனவரி 1, 1996-ல் கம்பெனியில் 28 வருட அனுபவம் கொண்ட அவர் புதிய சேர்மனாகப் பதவியேற்றார்.

நூறு வயதைத் தாண்டி, இன்றும் வெற்றிநடை போடும் 28 கம்பெனிகளில் ஒன்று ஐடிசி. ஆசீர்வாத் கோதுமை மாவு, சன்ஃபீஸ்ட் பிஸ்கெட், பிங்கோ சிப்ஸ், யிப்பீ நூடுல்ஸ், விவெல் சோப், கிளாஸ்மேட் நோட்டுப் புத்தகங்கள், மங்கள்தீப் அகர்பத்திகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் கம்பெனி ஐடிசியாகும்.

புகையிலை விற்பனையை முதன்மையாகக் கொண்ட ஐடிசி குழுமத்தை எப்எம்சிஜி நிறுவனமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர் தேவேஸ்வர்.

அவரின் பணிக் காலத்தில் ஐடிசி குழுமம் குறிப்பிடத்தகுந்த அளவு வளர்ந்தது. அவரின் பணிகளைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT