ஐந்து மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு 50 சதவீதத்துக்கும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையான காலத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அசோ சேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வரிசையில் 20 சதவீத முதலீடு ஈர்த்து மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்து ஆந்திரப் பிரதேசத்தில் 8.4 சதவீதம், தமிழகத்தில் 8.1 சதவீதம், ஒடிசாவில் 6.7 சதவீதம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 6.2 சதவீத அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முதலீடு காரணமாக இந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது.
மேலும் புதிய திட்டங்கள் எவ்வித தாமதமும் இன்றி இந்த மாநிலங்களில் உரிய காலத்தில் நடைபெற்றதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அந்தந்த மாநிலங்களின் பொருளாதார அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலங்களின் வளர்ச்சியின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுக்கிறது.
முதலீட்டு முடிவுகள் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டுவந்தாலும் பல்வேறு காரணிகள்தான் இத்தகைய முடிவை எடுக்கத் தூண்டுவதாக அசோசேம் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த ஐந்து மாநிலங்கள் தவிர மேற்கு வங்கத்தில் 5.3 சதவீதமும், சத்தீஸ்கரில் 4.8 சதவீதமும், அசாமில் 3.9 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில் 3.8 சதவீதமும், இமாசலப் பிரதேசத்தில் 3.4 சதவீதமும் முதலீடுகள் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012-13-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவன முதலீடு 9.05 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் (2011-12) இது 13.42 சதவீதமாகவும் 2010-11-ம் நிதி ஆண்டில் 15.52 சதவீதமாகவும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.