இந்தியாவை விட்டால் முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் கிடையாது என்று ஜப்பான் நாட்டு முதலீட்டாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தியாவில் அதிகார வர்த்தகத்துக்கு இனி இடம் இல்லை, இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்றார் மோடி.
டோக்கியோ பங்குச்சந்தை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, ஜனநாயகம், இளைஞர்கள், மக்களின் தேவை ஆகியவற்றை ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும். ஜப்பானை விட்டு வெளியே வந்து இந்தியாவை பார்த்தால் வேறு எங்கேயும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.
உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு தேவையாக நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
நான் சிறுவயதில் இருந்த போது ‘மேட் இன் ஜப்பான்’ என்று இருந்தால் அந்தப் பொருளின் தரம் பற்றி யோசிப்பதற்கே இடமில்லை என்று எண்ணினேன். அதேபோல இந்தியாவும் வரவேண்டும் என்று விருப்பப்படுவதாகக் கூறினார்.
மேலும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கொண்டுவந்த ‘கிழக்கை பாருங்கள்’ எனும் திட்டம் குறித்தும் நினைவு கூர்ந்தார்.
இந்தியா, ஜப்பானை பார்த்தது போல், ஜப்பான் இந்தியாவை பார்க்கிறது. ஜப்பான் நாட்டு முதலீடுகளை கவர்வதற்கு, ஜப்பான் கடைப்பிடிக்கும் வேலை மாதிரியைத்தான் இந்தியா பின்பற்றுகிறது என்றார் மோடி.
கடந்த இரண்டரை வருடங்களில் செய்யாதது, 100 நாள் ஆட்சியில் செய்யப்பட்டுள்ளன என்று தன்னுடைய 100 நாள் ஆட்சியை பற்றி மோடி குறிப்பிட்டார்.
அந்நிய முதலீட்டுக்குத் தேவையான வசதிகளை இந்தியா செய்வதற்குத் தயாராக இருக்கிறது. இந்தியா இல்லாமல் ஜப்பான் முழுமையடையாது, ஜப்பான் இல்லாமல் இந்தியா முழுமை அடையாது என்றார்.
மேலும் இந்தியாவின் மென்பொருள் திறமையும், ஜப்பானின் ஹார்ட்வேர் திறமையும் இணையும்போது பல விஷயங்கள் சாத்தியமாகும் என்றார்.