மத்திய அரசு அறிவுசார் சொத்துரிமை குறித்து புதிய கொள்கையை விரைவில் வெளியிடும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அறிவுசார் சொத்துகளைக் காக்க புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார். ஏற்கெனவே உள்ள கொள்கையைவிட தெளிவாகவும், நமது உரிமைகைகளைக் காக்கும் வகையிலும் புதிய கொள்கை இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய காப்புரிமை சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளதே, அதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அது குறித்து விரிவான விளக்கத்தை அமைச்சர் அளிக்கவில்லை. பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமை பதிவு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினர். இந்த பிரச்சினை கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் பதில ளித்தார்.
இது தொடர்பாக ஆலோசனை மற்றும் கருத்துகளை தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டிஐபிபி) இணையதளத்தில் வெளியிட்டுள்ளாக அத்துறையின் செயலர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டு நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்று பாஜக அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இருப்பினும் இத்துறையில் 51 சதவீத முதலீட்டை அனுமதிப்பது என்ற முந்தைய கொள்கையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தனது அமைச்சகம் கருதுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதா அல்லது வேண் டாமா என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் கிடையாது. சில்லறை வர்த்த கத்தில் பன்முக பிராண்ட் நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக அறிவிக்கை வெளி யிட வேண்டும் என்று இதுவரை கருதவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.