பத்து வயதான சிறுவர்கள் கிரிக்கெட் பேட்டை கனவு கண்ட காலம் போய் ஸ்போர்ட்ஸ் பைக்கை யோசிக்கும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. இந்த நிலையில் இளைஞர்களுக்கு பிடித்தமான பைக் எது, அவர்கள் ரசனை எப்படி? ஏன் ? என்று அறிய சென்னையின் பிரதான இரு சக்கர வாகன விற்பனையகங்களைச் சுற்றி வந்ததில் ஏராளமான தகவல்கள் கிடைத்தன.
பெரும்பாலும் முதல்முறை யாக பைக் வாங்க வரும் இளைஞர்கள் வண்டி லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்வதைவிட அது எந்த அளவுக்கு ஸ்டைலாக உள்ளது என்பதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றனர். மேலும் பைக் ஓட்ட பழகி கொஞ்சம் அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் ஸ்டைல், வேகம், எரி பொருள் சிக்கனம் என பல விஷயங்களை கணக்கில் கொண்டு பஜாஜ் பல்சர், யமஹா எஃப் இசட், ஹோண்டா எக்ஸ்ட்ரீம் (சி.பி.இசட்), பேஷன் ப்ரோ, கேடிஎம் உள்ளிட்ட பைக்குகளை விரும்பி வாங்குகின்றனர்.
பல்சர் 150 சிசி
சென்னையை பொறுத்தவரை இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது பல்சர் 150சிசி பைக். இந்த வண்டியின் கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, மற்றும் அதன் வேகம் இளைஞர்களை பெரிதும் ஈர்க்கிறது. பல்சர் 150 சிசியின் டிடிஎஸ்-ஐ மற்றும் எக்ஸாஸ்ட் தொழில்நுட்பம் 15 குதிரை திறன் அளவுக்கு கொடுக்கும் சக்தியால் லிட்டருக்கு 65 கி.மீ தருகிறது.
இதுதவிர முன் சக்கர டிஸ்க் பிரேக், அலாய் வீல், போன்ற அம்சங்களும் இளைஞர்களை வெகுவாகக் கவர்கிறது. பொதுவாக இரண்டு சக்கர வாகனங்களில் உள்ள அகலம் குறைவான சக்கரங்கள் சில நேரங்களில் பிரேக் போடுகிற போது வண்டியை சரித்துவிடக்கூடும்.ஆனால் இந்த வண்டிகளை பொறுத்தவரை இதிலுள்ள அகலமான சக்கரங்கள் கூடுமான வரை விபத்துகளைத் தடுக்க உதவி செய்கிறது.
பல்சரின் 180சிசி மற்றும் 220 சிசி வண்டிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இருந்தாலும் அதன் எடை மற்றும் கூடுதலான விலை போன்ற விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. ஆனால் 150 சிசியின் விலை 68 ஆயிரம் ரூபாய் என்பதால் இதை அதிகளவில் விரும்புகிறார்கள்.
யமஹா எஃப்.இசட்
சென்னையிலுள்ள ஜே.எம்.பி. யமஹாவின் சூளைமேடு மேலாளர் கார்த்திக் கூறுகையில், “யமஹா எஃப்.இசட் 150 சிசி ரக பைக் தற்போது அதிகளவில் விற்பனையாகி கொண்டிருக்கிறது. இந்த வண்டியை 25 வயதுக்கு குறைவான வயதுள்ளவர்களே விரும்புகிறார்கள்” என்றார்.
முழுக்க முழுக்க ஸ்போர்ட்டியான தோற்றத்தை விரும்பும் இளைஞர்கள் யமஹா எஃப்.இசட்டைத் தான் தேர்வு செய்கிறார்கள். இதற்கு காரணம் இந்த வண்டியின் அதி நவீன ஸ்போர்ட்டியான லுக். மற்ற வண்டிகளை விட உயரமான பின்னிருக்கைகளை கொண்டிருக்கும் இந்த வண்டியில் டபுள்ஸாக தூரப்பயணம் மேற்கொள்வதை இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
மற்றபடி செயல்பாடுகள், விலை போன்றவற்றில் பல்சர் 180 சிசி பைக்குகளுடன் ஒத்திருக்கின்ற யமஹா எஃப்.இசட் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் அதிகம் பிரபலமாகி வருகிறது. பொதுவாக பைக்கின் உயரம் அதிகமாக இருந்தால் புதியவர்கள் ஒருவித பயத்துடனே வண்டியை ஓட்டுவார்கள்.
அதே நேரத்தில் உயரம் குறைகின்ற போது கொஞ்சம் நம்பிக்கையுடன் பைக் ஓட்டமுடியும். அந்த வகையில் யமஹா எஃப்.இசட் வண்டியின் உயரம் புதியவர்களுக்கு ஏற்ற வகையில் உள்ளது. வண்டியின் நீளமும் அகலமும் மற்ற வண்டிகளைவிட அதிகமாகவே உள்ளது.
இதுமட்டுமின்றி இந்த வண்டியின் மைலேஜ் என்பது லிட்டருக்கு 40 முதல் 45 தான் என்றாலும், இதன் அசாத்திய வேகம் மற்றும் மிக அகலமான முன் மற்றும் பின் சக்கரங்கள் பெருமளவில் பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்கின்றன.
ஹோண்டா எக்ஸ்ட்ரீம்
ஹீரோ ஹோண்டாவாக இணைந்திருந்த போது சி.பி.இசட் ஆக இருந்த அதே பைக் தற்போது ஹோண்டா எக்ஸ்ட்ரீம் என்று அவதாரம் எடுத்துள்ளது. தற்போது ஹோண்டா பிரியர்களின் மத்தியில் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த எக்ஸ்ட்ரீம் வண்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சென்னை நாகப்பா மோட்டார்ஸின் பைக் டெலிவரி பிரிவு அலுவலர் ஜோசப் கூறுகிறார்.
ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜினின் வேகம் மற்றும் இதன் அடர்த்தியான தோற்றம் இளைஞர்களை ஈர்க்கிறது. வெள்ளி, கருப்பு, ஊதா, சிகப்பு, இளஞ்சிவப்பு என ஐந்து வண்ணங்களில் வரும் இந்த வண்டியில் சிகப்பு நிறத்தை பெரும்பாலும் இளைஞர்கள் விரும்பி வாங்குகின்றனர். மேலும் இந்த வண்டியின் இருக்கை மற்ற ஸ்போர்ட்டி மாடல் பைக்குகளை போல் அதிகப்படியான உயரத்தை கொண்டிராமல் ஓரளவு அமருபவருக்கு ஏற்றவாறு உள்ளது.
மேலும் கொஞ்சம் டீசண்ட் லுக் என்று விரும்பும் இளைஞர்கள் தற்போது ஹோண்டாவின் பேசன் ப்ரோ வண்டியையும் அதிகம் வாங்குகிறார்கள். இந்த வண்டி கையாளுவதற்கும் பராமரிப்பதற்கும் எளிமையாக உள்ளதே இதற்கு காரணம். இளைஞர்களின் பைக் ஆர்வம் பற்றி இந்தோனேசியாவில் சென்றாண்டு நடந்த பைக் ரேஸில் சாம்பியன் பட்டம் பெற்ற ரேஸர் ஆனந்தராஜ் பகிர்ந்து கொண்டதாவது:
வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் மைலேஜை நம்புகிற சூழல் உள்ளது. இதனால் அவர்கள் பிளாட்டினா, ஸ்பிளண்டர், ஸ்டார் சிட்டி உள்ளிட்ட வண்டிகளை தேர்வு செய்கிறார்கள்.