வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) காரணமாக மெட்டா நிறுவனத்தில் விரைவில் 16,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மென்லோ பார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு மெட்டா நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது. தற்போது மெட்டா நிறுவனத்தில் சுமார் 79,000 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 16,000 பேரை அடுத்த சில மாதங்களில் பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல்கட்டமாக மே மாதம் 8,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து மெட்டா நிறுவன வட்டாரங்கள் கூறும்போது, “நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் நிறுவனத்தின் ஊழியர்களில் 20% பேரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் ஊழியர்களின் தேவை குறைந்து வருகிறது. மேலும் நிறுவனத்தின் செலவும் படிப்படியாக குறைந்து வருகிறது’’ என்று தெரிவித்தன.
கரோனா பெருந்தொற்று காரணமாக மெட்டா நிறுவனத்தில் 21,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு தற்போது அந்த நிறுவனம் மீண்டும் மிகப்பெரிய எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. மெட்டா மட்டுமன்றி பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து உள்ளன. இதுகுறித்து சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியதாவது:
ஏஐ தொழில்நுட்பத்தால் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலையிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். இந்த ஆண்டில் ஆரக்கிள், அமேசான் உட்பட 95 பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் 80,000 பேர் வேலையிழந்து உள்ளனர்.
அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் 30,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இதில் முதல் கட்டமாக 12,000 பேர் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அமேசான் நிறுவனத்தில் அண்மையில் 16,000 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டால் அமெரிக்காவின் யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் 30,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறது. பிரிட்டனின் முன்னணி ஊடகமான பிபிசி நிறுவனத்தில் 21,500 பேர் பணியாற்றுகின்றனர். ஏஐ பயன்பாட்டால் அந்த நிறுவனத்தில் விரைவில் 2,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.