எரிக்சன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாயை செலுத்தாததால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகியுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நடத்தி வந்த அனில் அம்பானி, நிறுவனம் நஷ்டமானதால் கடனாளியானார். ₹45,000 கோடி கடன் இருந்த நிலையில், அவரது சகோதரரான முகேஷ் அம்பானி (ஜியோ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் அலைவரிசை, கோபுரங்கள் உள்ளிட்டவற்றை ₹25,000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.
ஆனால், அதற்கு முன்பு பயன்படுத்திய அலைவரிசை கட்டணம் ₹2,900 தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தப்படவில்லை.தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு ₹1,600 கோடி தர வேண்டி இருந்தது.
நீதிமன்ற மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு ₹550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் சம்மதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம்.
நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில்அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக அனில் அம்பானி சார்பில் ஆஜரான மூத்த வழகறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர், 118 கோடி ரூபாயை தற்போது செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு, அந்த தொகையை அரசு கருவூலத்தில் செலுத்த உத்தரவிட்டது.
இந்தநிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது. இதன்படி உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி இன்று ஆஜரானார். விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது.