2 ஹெக்டேர் நிலத்துக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, 3 தவணைகளாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை நிதி அமைச்சர் கோயல் அறிவித்தார், அவர் கூறுகையில், " வேளாண் துறையில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, 2 ஹெக்டேர் நிலப்பரப்புக்குக் குறைவாக வைத்திரு்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை ஆண்டுக்கு 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும். இந்த நிதிஉதவி அனைத்தும் மத்திய அரசால் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை அனைத்தும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி 2019-20-ம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உணவுதானியங்களை விலை குறைவாக வழங்குவதற்காக 2018-19-ம் ஆண்டில் ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.