வங்கிகள் இணைப்புக்கு எதிராக வரும் 26-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக வங்கிகள் கூட்டமைப்பு முடிவு செய்து அறிவித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் வரும் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தை வங்கி அதிகாரிகள் சங்கம், மற்றும் வங்கிகள் ஊழியர்களின் 9 சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி யூனியன்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நடத்துகிறது.
இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறுகையில் “ 3 வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு வங்கிகளும், அரசும் முடிவு செய்து அதைநோக்கி நகர்ந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
"வங்கி யூனியன் ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து யூனியன்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும்" என்று வங்கி ஊழியர்கள் தேசிய அமைப்பின் துணைத் தலைவர் அஸ்வானி ராணா தெரிவித்தார்.
இந்த 3 வங்கிகளும் இணைக்கப்பட்டால், எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய வங்கியாக இது இருக்கும். ஜூன் மாதம் வரை இந்த 3 வங்கிகளின் ஒருங்கிணைந்த வர்த்தகம் ரூ.14.82 லட்சம் கோடியாகும்.
இந்த 3 வங்கிகளில் தேனா வங்கி மிகவும் பலவீனமான வங்கியாகும். இந்த வங்கியில் வாராக்கடன் 11 சதவீதமாகவும், ரூ.1.72 லட்சம் கோடி வர்த்தகமும், பேங்க் ஆப் பரோடாவின் வாராக்கடன் 5.4 சதவீதமும், வர்த்தகம் ரூ.10.4 லட்சம் கோடியும், விஜயா வங்கியில் வர்த்தகம் ரூ.2 லட்சம் கோடியும், வாராக்கடன் 4.10 சதவீதமும் இருக்கிறது.