நாட்டில் இயங்கும் அனைத்து பேமெண்ட் வங்கிகளின் ஒட்டுமொத்த நிகர நட்டம் இரு மடங்குக்கும் மேல் தொடர் சரிவு கண்டுள்ளது.
நிதி உள்ளடக்கத்துக்காக மத்திய ரிசர்வ் வங்கியின் மூளையில் உதித்ததே பேமண்ட்ஸ் வங்கிகள் ஆகும். இந்நிலையில் ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் பேமண்ட்ஸ் வங்கிகளின் ஒட்டுமொத்த நிகர நட்டம் முந்தைய நிதியாண்டின் நட்டமான ரூ.242 கோடியிலிருந்து நடப்பு நிதியாண்டில் ரூ.516 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த வங்கிகள் தொடக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதால் நடைமுறைச் செலவுகள் அதிகரித்ததே நஷ்டத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. செலவுகள் 5 மடங்கு அதிகரித்து வங்கித் தொடர்பில்லாத வாடிக்கையாளர்களையும் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதே வேளையில் பேமண்ட்ஸ் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் கடந்த ஆண்டின் ரூ.30 கோடியிலிருந்து ரூ.151 கோடியாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வருவாயும் ரூ.1178 கோடியாக அதிகரித்துள்ளது. டெபாசிட்களும் 6 மடங்கு அதிகரித்து ரூ.438 கோடியாக உயர்ந்துள்ளது.
நஷ்ட நிலை தொடரவே வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து
இந்த நஷ்டப் போக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று வங்கித்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தத் துறை ஒழுங்குமுறை விதிகளினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
2017-ல் முதல் பேமெண்ட்ஸ் வங்கியைத் தொடங்கிய ஏர்டெல் நிறுவனம் கே.ஒய்.சி விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ஆர்பிஐ தடை விதித்தது.
2014-ல் 41 நிறுவனங்கள் பேமெண்ட்ஸ் வங்கிகளுக்காக விண்ணப்பித்தன. இதில் 11 நிறுவனங்களுக்குத்தான் உரிமம் வழங்கப்பட்டன. இந்த 11-ல் ஆதித்யா பிர்லா பேமெண்ட்ஸ் வங்கி, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிகள் இயங்கத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.