மேற்கத்திய நாடுகளில் வேலை வாய்ப்பைத் தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. அந்த நாடுகளில் நிலவும் பொருளாதார தேக்க நிலையே இதற்குக் காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் மேலை நாடுகளில் பணிபுரியும் திறன் மிகுந்த பணியாளர்களும் இந்தியாவுக்குத் திரும்பி வரவே விரும்புகின்றனர். உள்நாட்டில் தங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
மேற்கத்திய நாடுகளில் வேலைக்குச் செல்வதற்கு 40 சதவீதம் பேர் தயக்கம் காட்டுகின்றனர். அல்லது மிகுந்த எச்சரிக்கையுடன் பணி யை ஒப்புக் கொள்வதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
மேலை நாடுகளில் பணியாற்றுவோரில் திறன் மிக்கவர்கள் இந்தியாவில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி காரணமாக தங்களது திறமைக்கு உரிய வேலை நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி தாயகம் திரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்கத்திய நாடுகளுக்கு வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கை 34 சதவீதமாகவும், அங்கு தொழில்முனைவோராக வேண்டும் என்ற நோக்கில் செல்வோரின் எண்ணிக்கை 26 சதவீதமாகவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலை நாடுகளில் வேலை தேடிச் செல்வோரில் 28 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை நாடுகின்றனர். தொலைத் தொடர்பு, உற்பத்தித் துறையைத் தேர்வு செய்வோரும் இதில் அடங்குவர்.
கடந்த ஜனவரி 2014-ல் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிநாடு களில் வேலை வாய்ப்பை தேர்ந்தெடுப்போரில் 4 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளாகத் தெரிகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக வேலையில் ஸ்திரமற்ற நிலை இருப்பதால் திறமையானவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவது அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 58 நிறுவனங் களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இதைத் தெரிவிக் கின்றன. அதிக சம்பளம், கூடுதல் அலவன்ஸ் மற்றும் பிற சலுகைகள் ஆகியன இந்தியாவிலும் திறமையா னவர்களுக்குக் கொடுக்கப் படுவதால், இந்தியாவுக்கு திரும்பு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது.
இந்தியாவில் உற்பத்தித் துறை மற்றும் பெட்ரோ ரசாயன துறையில் இத்தகையோருக்கு வேலை வாய்ப்பு அபரிமிதமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நிறுவனங்களில் முதுநிலைப் பதவிகளுக்கு வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. இதனால் இத்தகையோர் உரிய வேலை வாய்ப்பை தேடி வருகின்றனர்.
அதேசமயம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் திறமையான இந்தியர்களை பயன்படுத்திக் கொள்ள தயாராகவே உள்ளன. பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்பம், அக்கவுண் டிங் மற்றும் நிதி சார்ந்த வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு வெளிநாடுகளில் எப்போதுமே காத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக 5 முதல் 10 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் 10 முதல் 20 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.