போக்குவரத்து போலீஸாரிடம் சிக்னல்களில் மாட்டிக்கொண்டு தலையைச் சொறியும் நிறைய பேரின் பிரச்சினை வாகனங்களுக்கான காப்பீடுதான். வாகனத்துக்கு காப்பீடு எடுக்காமல் இருப் பவர்கள் அல்லது காப்பீட்டை உரிய காலத்தில் புதுப்பிக்காமல் இருப்பவர்கள் என இரண்டு ரகம் உண்டு. சென்னையிலே வாகனம் வைத்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினரிடம் வாகனங்களுக்கான காப்பீடு இல்லை, என்றால் நம்ப முடியுமா?
நகரங்களில் இப்படியென்றால் கிராமப்புறங்களிலோ, ``நாம காசு போட்டு வாங்குற வண்டிக்கு எவன்ட்டயோ போய் எதுக்கு இன்சூரன்ஸ்னு காசு கட்டணும்’’ என்று உதாசீனப்படுத்துகிறார்கள். காப்பீடு செய்யாமல் வாகனங்களை ஓட்டி வாழ்க் கையைத் தொலைத்தவர்கள் கதை நிறைய உண்டு. காப்பீடு என்பது நாம் வாங்கும் வாகனத்துக்கு இன்னொரு என்ஜின் போல என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை.”
இப்படி வாகன காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறார் ‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனத்தின் சென்னை கோட்ட முதுநிலை மேலாளர் சந்திரசேகர்.
எதிர்பாராமல் ஒரு வாகன விபத்து ஏற்படுகிறபோது அந்தச் சூழலில் எழுப்பப்படும் முதல் கேள்வி, ‘வாகனத்தை காப்பீடு செய்துள்ளீர்களா?’ என்பதுதான். வாகன காப்பீட்டிற்கென்று மேலை நாடுகளில் நிறைய திட்டங்கள் உள்ளன. இந்தியாவிலோ வெகுகுறைவாகதான் இருக்கிறது ஆனால் இவற்றைக் கூட பலரும் பின்பற்றுவதில்லை. வாகனங்களை காப்பீடு செய்வதற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூ ரன்ஸ் என ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதை தவிர நிறைய தனியார் நிறுவனங் களும் காப்பீடு சேவையை வழங்குகின்றன.
வாகனங்களை காப்பீடு செய்ய வேண்டும் என்ற சட்டமிருந்தாலும் இதுகுறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். தற்போது மூன்றாம் நபர் இன்சூரன்ஸ், விபத்து கால இழப்பீடு (Accidental package scheme), மேம்படுத்தப்பட்ட இழப்பீட்டு தொகை (Enhanced Cover) என மூன்று விதமான திட்டங்கள் இருக்கின்றன.
முன்பெல்லாம் மூன்றாம் நபர் விபத்து காப்பீடு திட்டத்தை வருடம் ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இப்போது மூன்றாண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமென்று அரசு அறிவித்துள்ளது. இதில் மூன்றாவதாக உள்ள மேம்படுத்தப்பட்ட இழப்பீட்டு தொகை என்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டமாகும். இதன்படி ஒரு வாகனம் ஏதோ பிரச்சினையென்று காப்பீட்டுக்காக வரும்போது அதனுடைய தேய்மானத்தை கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
இது செகண்ட் ஹேண்ட் முறையில் வாகனங்கள் வாங்கு பவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதற்கு முன்பிருந்த திட்டப்படி, ஒரு வாகனத்தின் பம்பர் சேதமடைந்திருந்தால் போதும், அந்த வாகனத்தின் வயதை கணக்கில் கொண்டு தேய்மான இழப்பீட்டில் 50 சதவீதம் வரை குறைத்துவிட்டுதான் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.. ஆனால் இந்த புதிய முறையின் மூலம் சேதாரத்துக்கான முழுத் தொகையையும் தந்துவிட முடியும். இது ஸ்கூட்டி போன்ற ஃபைபர் பாடி வாகன உரிமையாளர்களுக்கு ரொம்பவே உபயோகமான ஒன்றாகும்.
செகன்ட் ஹேண்ட் வாகன சந்தை பெருகிவிட்டதால் நிறைய செகன்ட் ஹேண்ட் வாகனங்கள் காப்பீட்டுக்காக வருகின்றன. ஒருவர் செகன்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது, அந்த காருக்கு ஏற்கெனவே முறையாக காப்பீடு பிரீமியம் கட்டப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்த்த பிறகே வாங்க வேண்டும். மேலும் முறையாக பிரீமியம் கட்டாமலோ அல்லது புதுப்பிக்கப்படாமலோ இருந்தால், அந்தக் காரினை வாங்க கூடாது. பைக்கிற்கும் இது பொருந்தும்.
காப்பீடு செய்யப்பட்ட வாகனங்கள் என்றால் அதன் உரிமையாளரின் பெயரிலிருந்து வாங்கியவர் பெயருக்கு மாற்றுகிற முறைகளை எளிதில் செய்து விடலாம்.
இது தவிர காப்பீட்டுக்காக விண்ணப் பிக்கப்படும் செகண்ட் ஹேண்ட் வாகனங்களை எங்கள் பொறியாளர்களை கொண்டும் சோதிப்போம். இதன் மூலம் சம்பந் தப்பட்ட வாகனம் காப்பீட்டுக்கு ஏற்புடையது தானா என்று தெரிந்துவிடும்.
இந்நிலையில் இந்த காப்பீட்டு முறையைத் தாண்டி புதிதாக சில திட்டங்களும் உள்ளன. சென்னை போன்ற ஊர்களில் நிறைய வாகனங்கள் மழைக்காலத்தில் அதிகமாக செயலிழக்கும். குறிப்பாக தண்ணீரில் சிக்கி என்ஜின்கள் கோளாறாவது சர்வ சாதா ரணம். இப்படி பிரச்சினைக்குள்ளாகும் வாகனங்களுக்கு இதுவரை காப்பீடு வசதி கிடையாது.
ஆனால் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இயற்கை இடர்பாடுகளுக்காகவும் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முறையை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மூலம் அமல்படுத்தவுள்ளோம். இது தவிர வாகனத்தின் உரிமையாளருக்கு மட்டு மன்றி அந்த வாகனத்தில் சம்பளத்துக்கு ஓட்டுநராக உள்ளவரும் விபத்து காப்பீட்டை பெறுகிற திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.
கார்களுக்கு ரிமோட் சாவிகள் வந்துவிட்டன. சாவி தொலைந்துவிட்டால் அதை திரும்பி வாங்குவதற்கு ஆகும் செலவு அதிகமாகும். எனவே கார் சாவிகள் தொலைகிற பட்சத்தில் அதற்கும் காப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த ஒருவரின் கார் ஆந்திரா மாநிலத்தில் ஏதோ பிரச்சினையாகி அங்கேயே நிற்கிறது என்றால் அதை மீட்டுக் கொண்டு வந்து சேர்க்க நிறைய தொகை செலவாகும். இதை ஈடு செய்ய வாகன போக்குவரத்து இழப்பீட்டுத் தொகையையும் அமல்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.