இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் நீண்டகால சாதனையாளராக விளங்கிய பிளிப்கார்ட்டை அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் விற்பனையில் முந்தியுள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெப் பெசோஸ் இருந்து வருகிறார். இந்தியாவில் அமேசான் தனது விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எலெட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் பலசரக்கு வரை பல பொருட்களையும் அமேசான் விற்பனை செய்கிறது. அன்றாட பொருட்கள், பண்டிகைகால பொருட்கள் என அனைத்தையும் விற்பனை செய்து வருகிறது.
இதனால் இந்தியாவில் நீண்டகாலமாக கோலோச்சி வரும் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானுக்கு சர்வதேச அளவில் போட்டியாளராக விளங்கும், வால்மார்ட் நிறுவனம் அண்மையில் பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கியது.
இதன் பிறகு பிளிப்கார்ட்டை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை வால்மார்ட் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் விற்பனையில் பிளிப்கார்ட் நிறுவனத்தை அமேசான் முந்தியுள்ளது.
2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஓராண்டு விற்பனை 45 ஆயிரம் கோடியாக உள்ளது. அதேசமயம் அமேசான் இந்தியாவின் விற்பனை 54 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிளிப்கார்ட் விற்பனை
2016-ம் நிதியாண்டு: ரூ.26 ஆயிரம் கோடி
2017-ம் நிதியாண்டு: ரூ.28 ஆயிரம் கோடி
2018-ம் நிதியாண்டு: ரூ. 45 ஆயிரம் கோடி
அமேசானின் விற்பனை
2016-ம் நிதியாண்டு: ரூ.17 ஆயிரம் கோடி
2017-ம் நிதியாண்டு: ரூ.29 ஆயிரம் கோடி
2018-ம் நிதியாண்டு: ரூ. 54 ஆயிரம் கோடி
விற்பனையில் அமேசான் முன்னிலை வகித்து வரும்போதிலும், லாபத்தை பொறுத்தவரை பிளிப்கார்ட் முன்னிலையில் உள்ளது. அமேசானின் வருவாய் 23 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம் பிளிப்கார்ட்டின் வருவாய் 27 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.