வணிகம்

ஆன்லைன் ராஜா 41: ஜெயிக்கப்போவது யார்?

எஸ்.எல்.வி மூர்த்தி

டாபா வளர்ச்சியில் ஏன் வேகமில்லை? ஜாக் மா ஆராய்ந்தார். காரணம், மனித மனப்போக்கு. புதிதாக வரும் பொருட்கள், கம்பெனிகள் ஆகியவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவே மாட்டோம். அவை வெற்றி கண்டவுடன், அவற்றின் பின்னால் ஓடுவோம். ஜாக் மாவுக்கு இந்த நாடித்துடிப்பு நன்றாகவே தெரியும். நிஜ வெற்றி வரத் தாமதமாகிறதா? அவருக்கா வழி தெரியாது? நடத்தினார் ஒரு நாடகம்.     

டாபாவில் வேலை பார்த்த ஏழுபேரையும் கூப்பிட்டார். 

"நீங்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு நான்கு ஐட்டங்கள் விற்பதாக அறிவியுங்கள்.’’

“எதை விற்கவேண்டும்?”    

"பியர் ஒம்மிடியார் ஈ பே தொடங்கியபோது, முதலில் விற்ற பொருள் என்ன தெரியுமா? அவருடைய ரிப்பேரான லேசர் லைட். அதை 14 டாலருக்கு வாங்க ஒருவர் வந்தார். ஆன்லைனில் சிலர் தேவைக்காகப் பொருட்கள் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் த்ரில்லுக்காக. ஆகவே, எதை வேண்டுமானாலும், விற்பனைக்கு விடுங்கள்.” 

ஜாக் மாவின் பங்கு அவர் கைக்கடிகாரம். ஏழு பேரும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனைகள் நடத்திக்கொண்டார்கள். டாபா சுறுசுறுப்பாக இயங்கும் இணையதளம் என்று காட்ட நடத்தப்பட்ட இந்த நாடகத்தைப் பொதுமக்கள் நிஜம் என்று நம்பினார்கள். மெதுவாக தங்கள் பொருட்களையும் பட்டியலில் சேர்த்தார்கள். மூன்றே மாதங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகத் தொடங்கியது.

ஜூலை 2003. டாபா படுவேக வளர்ச்சி. அலிபாபாவின் சகோதர கம்பெனி என்பதை  அறிவித்தால் இன்னும் வேகமாக வளரலாம் என்று ஜாக் மா உணர்ந்தார். அலிபாபா, டாபா - வில் 12 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தார்கள். ஜாக் மாவிடம் முழு நம்பிக்கை கொண்ட ஸாஃப்ட் பேங்க் நிறுவனர் மாஸா. டாபாவில் 82 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தார். இவர் பல துணிகர முதலீட்டாளர்களுக்கு முன்னோடி, வழிகாட்டி.

ஆகவே, ஃபிடலிட்டி (Fidelity), ஜி.ஜி.வி. கேப்பிட்டல் (GGV Capital), வென்ச்சர் TDF  (Venture TDF) பணமூட்டைகளோடு வந்தார்கள். வரப்போகும் ஈ பே யுத்தத்துக்குப் பணபலம் டாபா கஜானாவில்.

ஊடகச் சந்திப்பு. ஜாக் மா அறிவிப்பு, “அலிபாபா நிறுவனத்திலிருந்து டாபா என்னும் கஸ்டமர் டு கஸ்டமர் வெப்சைட் தொடங்கியிருக்கிறோம். உலகின் அனைத்து ஆன்லைன் கம்பெனிகளும் அமெரிக்க பாணியை காப்பி அடிக்கிறார்கள். எங்கள் பாதை புதிய பாதை. உதாரணமாக, டாபாவில் அடுத்த மூன்று வருடங்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது, விற்பனைக் கமிஷனும் கிடையாது.”

"அப்படியானால், டாபாவுக்கு லாபம் எங்கிருந்து வரும்?”

“அது எங்கள் பிசினஸ் ரகசியம்.”

ஜாக் மாவின் வழக்கமான குறும்புச் சிரிப்பு. ஏன் சிரித்தார்? நுழைவுக் கட்டணத்தையும், விற்பனைக் கமிஷனையும் ரத்து செய்தது, அவர் ஈ பே –க்குத் தோண்டிய முதல் குழி. போர்க்களங்களில் மாபெரும் வெற்றிகள் கண்ட நாடு ரோம்.  அவர்களின் முக்கியமான ஒரு யுத்த யுக்தி - எதிரிக்கு வரும் உணவு சப்ளையை வெட்டுவது. இதை, எதிரியை வாளால் துன்புறுத்துவதைவிட, பட்டினியால் துன்புறுத்துவதுதான், முழுமையான திறமையின் அடையாளம் (To distress the enemy more by famine than by the sword is the mark of consummate skill) என்று சொல்வார்கள். 

ஜாக் மாவின் யுக்தி இதுவேதான். அமெரிக்காவிலும், சீனாவிலும், ஈ பேயின்   வருமானம் இந்த இரண்டு வழிகளிலும் தான் வந்துகொண்டிருந்தது. இவற்றை ரத்து செய்தால் அவர்களின் சாம்ராஜ்ஜியமே ஆட்டம் கண்டுவிடும். ரத்து செய்யாவிட்டால், சீனக் கஸ்டமர்கள் டாபாவுக்கு மாறிவிடுவார்கள். ஈ பே எந்த நிலைப்பாடு எடுத்தாலும், வெற்றி ஜாக் மாவுக்குத்தான். என்னா மூளைப்பா இந்த மனுசருக்கு?

டாபாவின் அறிவிப்புக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஈ பே மெளனம். ஊர் இண்டு பட்டால், ஊடகங்களுக்குத் தலைப்புச் செய்தி. ஈ பேயின் கருத்தைக் கேட்டு நச்சரித்தார்கள்.  அவர்களின் பொதுஜனத் தொடர்பாளர் சொன்னார், ``ஈ பே - யில் நுழைவுக் கட்டணமும், விற்பனைக் கமிஷன் முறையும் தொடரும்.”

கடைப்பிடிக்கப்போகும் யுக்திகளை ரகசியமாக வைத்திருக்கவேண்டும் என்பது போட்டிகளிலும், போர்களிலும் பாலபாடம். ஈ பே மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு முதல் சறுக்கல். ஈ பே தலைவர் விட்மேனுக்கு இந்த எச்சரிக்கை மணிகள் எதுவும் காதில் விழவில்லை. ஏனென்றால், பிரபல நிதி நிபுணர்கள் கூட, ஜாக் மாவை ஒரு போட்டியாக, பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

1999 – ஆம் ஆண்டில், அமெரிக்காவின் முன்னணித் துணிகர முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் ஸாக்ஸ் 3.3 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து அலிபாபாவின் 50 சதவிகிதப் பங்குகளைப் பெற்றிருந்தார்கள். 2004 – ஆம் ஆண்டில் அவற்றின் மதிப்பு 22 மில்லியன் டாலர்கள். ஆமாம், ஐந்தே வருடங்களில் மதிப்பு ஏழு மடங்கு எகிறிவிட்டது.  ஈ பே முன்னால் அலிபாபா நிற்கமுடியாது, பூட்ட கேஸ் என்று முடிவு கட்டினார்கள். அலிபாபா பங்குகளை விற்றுவிட்டார்கள்.

இது ஜாக் மாவுக்குப் பெரும் பின்னடைவு. அதே சமயம், விட்மேனுக்குக் கிடைத்த உற்சாக டானிக்.விட்மேனுக்கு இன்னொரு வீரிய மருந்தும் கிடைத்தது. கோல்ட்மேன் ஸாக்ஸில் நிதி ஆலோசகராக இருந்தார் மேரி மீக்கர் (Mary Meeker). கார்ப்பரேட் உலகில் ஏகப்பட்ட மதிப்பு, மரியாதை. ஆன்லைன் பிசினஸ் பற்றி 217 பக்க ஆராய்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டார்.

விட்மேனை "இன்டர்நெட் உலக மகாராணி” என்று வர்ணித்தார். இவர் கணிப்புப்படி, சீனாவில் ஜெயிக்கப்போவது ஈ பே தான். அலிபாபாவும், டாபாவும் நோ சான்ஸ். மேரி மீக்கர் ஜோசியத்தால் ஈ பே பங்குகள் விலை 80 சதவிகிதம் உயர்ந்தன. பெரும்பாலான நேரங்களில் ஜால்ரா சப்தங்களில் உண்மைகள் கேட்காது. விட்மேன் முழங்கினார், "வரப்போகும் பதினெட்டு மாதங்களில் சீனாவின் ஆன்லைன் பிசினஸ் யுத்தம் முடிந்துவிடும். சீனாவை ஜெயிப்பவர் உலகத்தை ஜெயிப்பார்.”

அது ஈ பே என்பது அவர் நினைப்பு, தன்முனைப்பு. கோல்ட்மேன் ஸாக்ஸ் அலிபாபாவின் வருங்காலத்தில் வைத்த அவநம்பிக்கையும், விட்மேனின் கொக்கரிப்பும் கண்டு ஜாக் மா மிரளவில்லை.  உறுதியோடு பதில் சொன்னார், "எந்த வெளிநாட்டுப் பூதத்தாலும், இந்த சீனப் பாம்பைக் கீழே இழுத்துத் தள்ள முடியாது.” இந்த ஊடகச் சந்திப்பில் அவர் உதிர்த்த இன்னொரு பொன்மொழி,  "ஈ பே கடலில் வாழும் சுறாமீன்.

நான் சீனாவில் யாங்ட்ஸே (Yangtze)* நதியில் இருக்கும் முதலை. கடலில் யுத்தம் நடந்தால், நாங்கள் தோற்போம். நதியில் நடந்தால், ஜெயிப்போம்.”** நதியில் (சீனாவில்தான்) யுத்தம் நடக்கப்போகிறது. அதனால், வெற்றி எங்களுக்கே என்னும் சூசகச் சூளுரை. 

இப்படி எறும்பு செம சுறுசுறுப்பு. யானைக்குத் தன்னை யார் தொடமுடியும் என்னும் மிதப்பு. கொர்ர்ர். தூக்கம். நடுநடுவில் விழித்தபோது, தூக்கக் கலக்கத்தில் எடுத்துவைத்த அடிகளில் பல தப்படிகள், தனக்குத்தானே தோண்டிக்கொண்டிருந்த படுகுழிகள்…….

(*சீனாவின் பெரிய  நீளமான நதி. ஆசியாவிலும் அதிக நீளமானது. உலகில், மூன்றாம் இடம். முதல் இரண்டு இடங்களில், அமெரிக்க அமேசான், எகிப்தின் நைல்.)

போர்ட்டர் எரிஸ்மேன் 2000 – 2008 காலகட்டத்தில் அலிபாபாவின் உலக மார்க்கெட்டிங் வைஸ்- பிரசிடென்ட் பதவியில் இருந்தார். இத்தோடு, ஜாக் மாவின் நெருங்கிய நண்பர்.

1995 முதல் 2009 வரையிலான அலிபாபாவின் வரலாற்றை Crocodile in the Yangtze: the Alibaba Story (யாங்ட்ஸே நதியில் முதலை – அலிபாபாவின் கதை) என்னும் பெயரில் ஆவணப்படமாகத் தயாரித்தார்.  75 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஈ பே – அலிபாபா யுத்தம் விலாவாரியாகக் காட்டப்பட்டிருக்கிறது. படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. தொழில் முனைவர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

(குகை இன்னும் திறக்கும்)
- slvmoorthy@gmail.com

SCROLL FOR NEXT