வணிகம்

சிண்டிகேட் வங்கி பங்கு 7% சரிவு

செய்திப்பிரிவு

திங்கள்கிழமை வர்த்தகத்தில் சிண்டிகேட் வங்கி பங்கு 7 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 6.90 சதவீதம் சரிந்து 134.35 ரூபாயில் முடிவடைந்தது.

50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக இந்த வங்கியின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. வர்த்தகத்தின் இடையே 8.5 சதவீதம் வரை கூட இந்த பங்கின் சரிவு இருந்தது.

இந்த வழக்கில் ஜெயின் தவிர 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் சிலரை சனிக்கிழமை சிபிஐ கைது செய்தது. குறிப்பாக பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேத் பிரகாஷ் அகர்வாலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரா வார். பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு 19.96 சதவீதம் சரிந்தது. ஒரு வர்த்தக தினத்தில் அதிகபட்ச சரிவான 20% தொட்டது.

புஷான் ஸ்டீல் நிறுவனம் பல மாத தவணை தொகைகளை கட்டாமல் இருந்து வந்தது. இந்தக் கடனை நீட்டிப்பதற்காக சிண்டிகேட் வங்கி தலைவர் 50 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கைது செய்யப்பட்டார். புஷான் ஸ்டீல் பங்கு 3.6% சரிந்து முடிவடைந்தது. பணியிலிருந்து ஜெயின் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக நிதித்துறை சேவைப் பிரிவு செயலர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.

ஐடி பங்குகள் உயர்வு

ரூபாய் மதிப்பு சரிந்ததால் ஐடி பங்குகள் 4% வரை உயர்ந்தன. இன்போசிஸ் பங்கு 3.66 சதவீதமும், விப்ரோ 2.42 சதவீதமும், டிசிஎஸ் 0.42 சதவீதமும் உயர்ந்தன. திங்கள் வர்த்தகத்தில், சென்செக்ஸ் பங்குகளில் இன்போசிஸ் அதிக அளவு உயர்ந்தது.

ஹெச்சிஎல் (2.52%), ஹெக்ஸாவேர் (2.06%) மற்றும் டெக் மஹிந்திரா பங்குகளும் (2.01%) உயர்ந்தன.

SCROLL FOR NEXT