வணிகம்

எகிறும் இன்ஃப்ளூயன்சர்ஸ் குளோபல் மார்க்கெட் - மக்கள் நம்பிக்கையை வென்றது எப்படி?

பாரதி ஆனந்த்

‘இதுதான் என் டெய்லி ரொட்டீன்’ என்ரொரு யுவனோ / யுவதியோ அதற்கு ஒரு பாந்தமான பின்னணி மியூசிக், அட்டகாசமான எடிட் என்று வீடியோவை தட்டிவிட்டால் அது சும்மா விர்ரென்று லைக்ஸ், வியூவ்ஸ் அள்ளி வைரலாகிவிடுகிறது. கொஞ்சம் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், ப்ரசண்டேஷன் ஸ்கில் இருந்தா போதும் நீங்களும் எங்களைப் போல் இன்ஃப்ளூயன்சார்தான் என்று அவர்களே கட்டவிழ்க்கும் மோட்டிவேஷன் ஸ்பீச்கள் வேறு இந்த புதிய ட்ரெண்டுக்குள் வயது பேதமின்றி அனைவரையும் ஈர்த்து வருகிறது. இதனால், 2025 இறுதியில் சர்வதேச சந்தையில் இந்த இன்ஃப்ளூயன்சர்களின் வணிகம் ( Influencer Economy) 32 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடக்கும் என்று கணிக்கப்படுகிறது.

“டிஜிட்டல் தளங்கள் தான் இந்த இன்ஃப்ளூயன்சர்களின் இயங்குதளம். ‘இன்ஃப்ளூயன்சர் எகானமி’ வர்த்தகம் மற்றும் கலாச்சார ரீதியாக ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. இன்ஃப்ளூயன்சர்களின் வளர்ச்சி என்பது நிறுவனங்கள், நுகர்வோர் மற்றும் படைப்பாளிகள் இடையேயான உறவின் ஒரு புதிய பரிணாம வளர்ச்சி.” என்கிறார் டிஜிட்டல் ரிசேர்ச் நிபுணர் ஒருவர்.

இன்ஃப்ளூயன்சர்களின் பரிணாம வளர்ச்சி... - காலங்காலமாக முன்னணி பிராண்டகள் இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்களைத்தான் தங்களது தயாரிப்புகளுக்கு முக அடையாளமாகப் பயன்படுத்தி வந்தன. ஆனால் 2000-களின் பிற்காலத்தில் சமூக வலைதளங்கள் சதா சர்வகாலமும் மக்களை எளிதில் சென்றுசேரும் தளமாக மாறியது. அந்த ஆரம்ப நாட்களில் இன்ஃப்ளூயன்சர்கள் தலைதூக்கினர். அவர்களை லோ - காஸ்ட் விளம்பர உத்தியாக நிறுவனங்களும் பயன்படுத்தின. ஆனால், இப்போது மார்க்கெட்டிங் நுணுக்கத்தால் இன்ஃப்ளூயன்சர்கள் பிரதான கவனம் பெற்றுள்ளனர்.

அதன் விளைவு 2010 தொடக்கத்திலிருந்து இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஒரு சர்வதேச தொழில்துறையாக உருவெடுத்தது. விளம்பர நிறுவனங்கள், டிஜிட்டல் மார்க்கெடிங் நிறுவனங்கள் இன்ஃப்ளூயன்சர் - பிராண்ட் மேட்ச்மேக்கிங்கை ஒரு தொழிலாக மாற்றின. அதனால் தான் இப்போது இன்ஃப்ளூயன்சர்கள் வெறும் அந்த அடையாளத்தைத் தாண்டி தொழில்முனைவோர், கலாச்சார அடையாளங்களாக மாறியுள்ளனர்.

இன்ஃப்ளூயன்சர்கள் மீது மக்கள் நம்பிக்கை வளர்ந்தது எப்படி? - திடீரென இன்ஃப்ளூயன்சர்கள் புற்றீசல் போல் பெருகக் காரணம் அவர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை எனும் கூறும் நிபுணர்கள், அத்தகைய நம்பிக்கை எப்படி உருவாகக் காரணம் ‘பேராசோஷியல் ரிலேஷன்சிப்’ என்று கணிக்கின்றனர். அதாவது இன்ஃப்ளூயன்சர்களை ஃபாலோ செய்யும் மக்கள் ஏதோ அவர்களுக்கு அந்த இன்ஃப்ளூயன்சருடன் தனிப்பட்ட பழக்கம் இருப்பதுபோல் கருதிக் கொள்கின்றன. அதனால் அவர்கள் பேச்சு இவர்களின் கலாச்சார வேர்களைத் தொடுவதாக கருதுகின்றனர். அதுவே நம்பிக்கைக்கு வித்திடுகிறது.

இதனால்தான் இப்போதைய ட்ரெண்ட் பிராண்டகளைவிட இன்ஃப்ளூயன்சர்கள் மீது நுகர்வோருக்கு அதீத நம்பிக்கை ஏற்படக் காரணமாக இருக்கிறது. உணர்வுப்பூர்வ பிணைப்பு நம்பிக்கையை வளர்க்கிறது.

ஃபாலோயர்ஸ் தங்களின் உன்னதமான நேரத்தையும், கவனத்தையும் தங்களுக்குக்காக கொடுக்கும்போது தாங்கள் அவர்களுக்கு அர்த்தமுள்ளவற்றை கொண்டு சேர்க்கவேண்டும் என்று இன்ஃப்ளூயன்சர்களும் மெனக்கிடுகின்ற்னர். இதுதான், இன்ஃப்ளூயன்சர் பொருளாதாரத்தின் பின்னணியாக இருக்கிறது. அதனால்தான் எல்லா பொருளாதாரத்தையும் போல் இந்த இன்ஃப்ளூயன்சர் பொருளாதாரமும் நம்பிக்கை பரிமாற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்ஃப்ளூயன்சர்கள் லைவ் சாட், கமென்ட்ஸ் மூலம் ஒருவித உறவுணர்வைக் கடத்துகின்றனர்.

அன்றாட வாழ்க்கை இறுக்கங்களில் இருந்து விடுவிப்பது, முக்கிய விவகாரங்கள் அல்லது ட்ரெண்டிங் புராடக்ட்ஸ் குறித்து ஒரு டுடூரியல் போல் செயல்படுவது, நுகர்வோர் வழிகாட்டியாக இருப்பது எனப் பல வகைகளில் இன்ஃப்ளூயன்சர்கள் ஒரு பாண்ட் உருவாக்கி வைக்கின்றனர்.

ப்ராண்ட்கள் கற்க வேண்டிய பாடம் என்ன? - இன்ஃப்ளூயன்சர்களை பற்றிய மார்க்கெட் ரிசர்ச் வல்லுநர்களின் பார்வை நுணுக்கமானது. அதிக ஃபாலோயர்ஸ் உள்ள இன்ஃப்ளூயன்சர்களுக்கு மட்டுமல்ல கணிசமான அல்ல குறிப்பிட்ட டார்கெட் ஆடியன்ஸ் மட்டுமே கொண்ட இன்ஃப்ளூயன்சர்களும் முக்கியமானவர்களே என்று அவர்கள் கணிக்கின்றனர். 1 லட்சம் ஃபாலோயர்ஸ் இருப்பவரும் முக்கியம், 10 ஆயிரம் ஃபாலோயர்ஸ் உள்ளவரும் முக்கியம் என்கின்றனர். மெகா இன்ஃப்ளூயன்சர்கள் ஏற்படுத்தும் வீச்சு பிரம்மாண்டமானது என்றால் சிறு சிறு குழுக்களிடன் நம்பகத்தன்மையுடன் சில பிராண்ட்களை கொண்டு சேர்க்க 10000 ஃபாலோயர்ஸ் கொண்ட இன்ஃப்ளூயன்சர்கள் அவசியம் என்கின்றனர்.

இதனால், நடுத்தர (மிட்-டயர்) மற்றும் மைக்ரோ இன்ஃப்ளூயன்சர்கள் மீது முதலீடு செய்வதும் நல்ல பலனை ரிட்டர்னாகத் தரும் என்கின்றனர். இதனால் தான் இன்ஃப்ளூயன்சர்களுக்கான ஏஜென்சிகள், ப்ரோக்கர்கள், வணிகச் சங்கங்கள் புதிதாக முளைக்கின்றன.

ஆனால் இப்படி இன்ஃப்ளூயன்சர்களைப் பயன்படுத்துவதில் பிராண்டகளும் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பல்வேறு சமூகவலைதள ப்ளாட்ஃபார்ம்களிலும் ஒரே கன்டென்ட்டை அவர்கள் பகிரும்போது ஒவ்வொன்றுக்கும் தேவைப்படும் அல்காரிதம் அறிந்து அவர்கள் செயல்படுவது அவசியமாகும். அவர்கள் புரோமோட் செய்யும் பிராண்டுடன் அவர்களே ஒரு பிராண்ட் அடையாளமாக இருப்பதால், இரண்டையும் ஒருசேர தக்கவைக்கும் நெருக்கடி இன்ஃப்ளூயன்சர்களுக்கு ஏற்படும். ட்ரால்களையும் சேர்த்தே அவர்கள் சமாளிக்க வேண்டிவரும்.

ஆனால் இன்ஃப்ளூயன்சர்கள் அதிகமாக ப்ராண்ட் பார்ட்னஷிப்கள் பெறும்போது அவர்கள் வெறும் வியாபாரிகள் போல் ஆகும் அபாயம் ஏற்படும். அந்த தருணத்தில் அவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான பேராசோஷியல் ரிலேசன்ஷிப் சேதாரமாகும். ஒருவேளை தவறான பிராண்டை புரோமோட் செய்துவிட்டால் அவர்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகும். சிறிய தவறும் பெரிய ரியாக்‌ஷன்களைக் கொண்டுவரும்.

அதேபோல் பிரபலமடைதல், பொருளாதாரச் சுதந்திரம் என எல்லாம் கிடைத்தாலும், இன்ஃப்ளூயசர்கள் அவர்களது சொந்த அடையாளத்தை தொலைக்கும் அபாயம் வெகுவாகவே உள்ளது. பணி - வேலை சமநிலையைப் பேணுவதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் வாழ்வுதான் வாழ்வாதாரம் என்பதால் பெர்சனல் - ப்ரொஃபஷனல் பிரிவினையை வரையறுக்க இயலாமல் திணற நேரிடும்.

உறுதுணைக் கட்டுரை - ‘தி கான்வர்சேஷன்’

SCROLL FOR NEXT