புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. 2026-ல் 2.2 மில்லியன் டன் எல்பிஜி எரிவாயுவை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் நிகழ்வு!. உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்றான இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய உள்ளது.
இந்திய மக்களுக்கு பாதுகாப்பான மலிவு விலையில் எல்பிஜி வழங்குவதற்காக மத்திய அரசு எல்பிஜி ஆதாரங்களை பன்முகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய நடவடிக்கையாக, அமெரிக்காவிடம் இருந்து 2026-ம் ஆண்டு 22 லட்சம் டன் எல்பிஜி-யை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கெமிக்கல் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கெமிக்கல் நிறுவனம் ஆகியவை இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த எல்பிஜி, அமெரிக்க கல்ஃப் கடற்கரை பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இந்தியாவின் ஆண்டு தேவையில் இது சுமார் 10% ஆகும்.
இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கெமிக்கல் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கெமிக்கல் நிறுவனம் ஆகியவை, கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நமது பொதுத்துறை நிறுவனங்கள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்காக குறைந்த உலகலாவிய விலையில் எல்பிஜி-யை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு விலைகள் 60%க்கும் அதிகமாக உயர்ந்த போதிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் நுகர்வோர்களுக்கு ரூ.500-550 விலையிலேயே எல்பிஜி வழங்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்தார். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1100க்கும் அதிகம் என்ற போதிலும் இந்த குறைந்த விலையில் அரசு வழங்கியது. இதன்மூலம், கடந்த ஆண்டு ரூ. 40,000 கோடிக்கு மேல் செலவை இந்திய அரசு ஏற்றது.” என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிவாயுவை கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதற்காக, இந்தியாவுக்கு கூடுதல் இறக்குமதி வரிகளை விதித்தார். இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து எல்பிஜி வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.