சென்னை: அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளை சந்தித்து வரும் நிலையில், முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் அதன் கார்ப்பரேட் பிரிவுகளில் சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம் உலகளவில் 1.54 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதில் கார்ப்பரேட் ஊழியர்கள் சுமார் 3,50,000 பேர் உள்ளனர். இதில் 10 சதவீதம் பணியாளர்கள், அதாவது 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், அமேசான் நிறுவனம் தகவல் தொடர்பு, சாதனங்கள் மற்றும் பாட்காஸ்டிங் உள்ளிட்ட பல பிரிவுகளில் இருந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த நிலையில், தற்போது மனித வளங்கள், தொழில்நுட்பம், செயல்பாடுகள், அமேசான் வலை சேவைகள் போன்ற பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்ததால், அதிகளவில் ஊழியர்கள் பணி நியமனம் செய்ததே தற்போதைய பணி நீக்கத்துக்கான காரணமாகவும் சொல்லப்படுகிறது.
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏஐ தொழிட்நுட்பத்தின் வளர்ச்சி அதிக வேலையிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த ஆண்டு இதுவரை 216 தொழில்நுட்ப நிறுவனங்கள் 98,344 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. இன்டெல், மைக்ரோசாப்ட் மற்றும் டிசிஎஸ் ஆகியவை பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து முன்னணியில் இருந்தன. இப்போது அமேசான் 30,000-க்கும் மேற்பட்ட பணிநீக்கங்களை அறிவித்துள்ளதால், இந்த ஆண்டு அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக அமேசான் இருக்கும்.
2022-ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் அதன் ஊழியர்களில் 27,000-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது. அதுவே அமேசானின் அதிகளவிலான பணிநீக்கமாக இருந்த நிலையில், தற்போது அந்நிறுவனம் 30 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.