புதுடெல்லி: இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா விரைவில் 15 முதல் 16 சதவீதமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உடன்படிக்கை விரைவில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வரி விதிப்பு குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கு சுமுக தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேளாண்மை, எரிசக்தி ஆகியவை இருதரப்பு ஆலோசனையில் மையப்புள்ளியாக இருந்தன. அதன்தொடர்ச்சியாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைக்கக்கூடும்.
மேலும் மரபணு மாற்றப்படாத அமெரிக்க சோளம் மற்றும் சோயா உள்ளிட்டவற்றின் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா ஒப்புக்கொள்ளும். அவ்வப்போது கட்டணங்கள் மற்றும் சந்தை அணுகலை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு வழிமுறையும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், இந்த விவகாரம் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமோ அல்லது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையோ கருத்து எதையும் உடனடியாக தெரிவிக்கவில்லை.
இதனிடையே நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினேன். வர்த்தகம் தான் அதில் முக்கிய விவாதமாக இருந்தது. எரிசக்தி விவகாரத்தில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கட்டுப்படுத்தும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்” என்றார்.
இதேபோன்று, பிரதமரும் ட்ரம்புடன் பேசியதை உறுதி செய்துள்ளார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிடவில்லை. இப்போது இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதிக்கிறது.