கோவை: ‘என்டிசி’ தொழிலாளர்களுக்கு நிலுவை வைக்கப்பட்ட ஊதியம் வழங்குவது தொடர்பாக டெல்லியில் இன்று தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மத்திய ஜவுளித் துறை செயலாளரை நேரில் சந்தித்து பேசியதை அடுத்து, ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) கட்டுப்பாட்டின் கீழ் 7 நூற்பாலைகள் உள்ளன. கரோனாவுக்கு பிறகு இந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் பாதி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களாக ஊதியம் நிலுவை வைக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் எம்.பி சச்திதானந்தம் தலைமையில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைவர் ராஜாமணி, சிஐடியு பஞ்சாலை சங்கத்தின் பொதுச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் டெல்லியில் உள்ள உத்யோக் பவனில் ஜவுளித் துறை செயலாளர் நீலம் சாமிராவை இன்று நேரில் சந்தித்து பேசினர்.
தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட செயலாளர் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு 50 சதவீதம், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 25 சதவீதம், மற்ற தொழிலாளர்களுக்கு 12.5 சதவீதம் ஊதியத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்து உத்தரவிட்டார். மேலும் தொழிலாளர்களின் நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.