கோவை: அமெரிக்க வரி விதிப்பு 45 நாட்கள் கடந்த நிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு, குறைந்த வட்டியில் கடனுதவி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் விரைவில் அறிவிக்க வேண்டியது அவசியம் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின், தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது: “2021-ம் ஆண்டு வெளியான தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை தற்போது காலாவதியாகிவிட்டது. உலக வர்த்தக சூழ்நிலைகள், குறிப்பாக அமெரிக்காவின் 50 சதவீத வரி காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
எனவே தமிழக அரசு கொள்கையை மறுசீரமைத்து புதுப்பிக்க வேண்டிய நேரமாகும். தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களுக்கான நேரடி நிவாரண நடவடிக்கைகள் எதையும் அறிவிக்கவில்லை. 45 நாட்கள் கடந்தும், எந்தவொரு சாதகமான தீர்வும் இல்லை. எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர், ஆனால் கொள்கை நிர்ணயர்கள் திசை தெரியாமல் உள்ளனர்.
அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?: எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களுக்கான நிவாரண தொகுப்பு – குறைந்த வட்டி விகிதத்தில் கடன், ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தல், கப்பல் செலவுக்கான உதவி வழங்க வேண்டும். ஏற்றுமதி கொள்கை புதுப்பிப்பு – சுங்க வரி போன்ற அவசர சூழ்நிலைகளுக்கு உதவக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும். புதிய சந்தைகளை நோக்கி ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற சந்தைகளில் பிராண்டிங், சான்றிதழ், சந்தை மேம்பாடு உள்ளிட்ட செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில்துறை பிரச்சினைகளை நேரடியாகக் கவனிக்க ஏற்றுமதி நெருக்கடி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். வழிகாட்டும் வார்த்தைகள் மட்டும் போதாது. எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களுக்கு தற்போது தேவை திடமான, தரவுகளால் ஆதரிக்கப்படும், துறையை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் மட்டுமே” என்று ரகுநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறியதாவது: ஜவுளித் துறைக்கு ரூ.90 ஆயிரம் கோடி, ரத்தினங்கள் விற்பனையில் சுமார் ரூ.85,000 கோடி மதிப்புள்ள இந்திய ஏற்றுமதியும், சுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆட்டோமொபைல் பாகங்கள் ஏற்றுமதியும், ரசாயனம் மற்றும் உரங்கள் ரூ.23,000 கோடி ரூபாய் மதிப்புள்ள களைக் கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், கரிம உரங்கள், ஹைபோகுளோரைட் போன்ற பொருட்களுக்கான ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பொருட்களின் விலை உயர்வு அமெரிக்க டீலர்கள் மாற்றும் விநியோகஸ்தர்களை நோக்கி திருப்பக்கூடும்.
மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவிகித பங்களிப்பை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தத் துறையில் பெரும் பங்காற்றுகின்றன. மனித வளம் குன்றிய அமெரிக்கா தனது தேவையை பூர்த்தி செய்வது என்பது அவ்வளவு எளிதானது இல்லை. நம்மீது வைத்து இருக்கும் சுமை ஐஸ் கட்டி போன்றது நாளடைவில் உருகிவிடும். நாம் இந்த சவால்களை எதிர்கொள்ள வளரும் நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த வேண்டும். இந்த உறவுகள் மட்டுமே நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்கும். இந்திய ஏற்றுமதிகளுக்கு நிலையான பாதையையும் வழங்கும்.
நாம் நமது பொருட்களுக்கான சந்தையை பன்முகப்படுத்த வேண்டும். 140 கோடி மக்கள் உள்ள தேசத்தில் பல்வேறு காரணங்களால் உள்நாட்டில் தேவையும் தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு நாட்டையே சார்ந்திருப்பதை தவிர்த்து மாற்று சந்தைகளைத் தேட வேண்டும். இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் உள்நாட்டு சந்தை வேகமெடுத்துள்ளது. வரிச் சுமையால் ஏற்பட்டு வரும் இழப்புக்கு ஈடு செய்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு உரிய நிவாரணமும் வளரும் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வேகப்படுத்த வேண்டும்” என்று ஜெயபால் கூறினார்.
தமிழ்நாடு ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது:”அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்து அமெரிக்காவிற்கு ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனங்களுக்கு நூல் விநியோகம் செய்து வரும் ஓபன் எண்ட் (ஓஇ) நூற்பாலைகளும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. மத்திய அரசு தொழில்துறையினருக்கு உதவும் வகையில், கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும். 25 சதவீதம் நிதி கிரெடிட் (சிசி) உயர்த்த வேண்டும். பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை அதிகம் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என்று அருள்மொழி தெரிவித்தார்.