வணிகம்

பயனர்களுக்கு கட்டண சந்தாவில் ஸ்மார்ட்போன் வழங்கும் BytePe: இதன் சிறப்பு என்ன?

வேட்டையன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கட்டண சந்தா அடிப்படையில் ஸ்மார்ட்போன் வழங்கும் முன்முயற்சியை BytePe எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆப்பிள், சாம்சங், விவோ, ஒப்போ, ரியல்மி, மோட்டோ, லாவா உட்பட பல்வேறு நிறுவனங்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சீரான இடைவெளியில் சந்தையில் புதிய போன்களை வழங்குவது வாடிக்கை. அதுவும் அண்மைய அப்டேட்களுடன் இந்த போன்கள் சந்தையில் அறிமுகமாகும். இருந்தாலும் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போன்களை அடிக்கடி மாற்றுவது சாத்தியம் இல்லாத நிலை. இந்த சூழலில் அதற்கு தீர்வு காணும் வகையில் தனது சேவையை வழங்குகிறது BytePe நிறுவனம்.

“நீண்டகால இஎம்ஐ, அவுட்-டேட்டான ஸ்மார்ட்போன் சாதனம் போன்றவரை பயனர்களை விரக்தி கொள்ள செய்கிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ள BytePe. இப்போதைக்கு எங்கள் சேவையை ஸ்மார்ட்போன்களுடன் தொடங்குகிறோம். வரும் நாட்களில் இன்னும் பல மின்னணு சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்” என BytePe நிறுவனர் ஜெயந்த் ஜா தெரிவித்துள்ளார்.

BytePe நிறுவனத்தின் சந்தா எப்படி செயல்படுகிறது? - பயனர்கள் இது நிறுவனத்தின் தளத்தில் தங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து கொண்டு, சந்தா கட்டணம் செலுத்தினால் அந்த போனை பயன்படுத்தலாம். இந்த சந்தா காலம் 12 மாதங்கள். அது முடியும் போது பயனர்கள் வேறு போனுக்கு அப்டேட் ஆகலாம் அல்லது அதே போனை மேலும் 12 மாதங்களுக்கு சந்தா கட்டணம் செலுத்தி பயன்பாட்டை நீட்டிக்கலாம். மொத்தத்தில் பயன்பாட்டு அடிப்படையில் இதில் சந்தா செலுத்தினால் போதும் என BytePe தெரிவித்துள்ளது. இதில் டேமேஜ் ப்ரொட்டக்‌ஷன் அம்சமும் உள்ளது.

BytePe தளத்தில் இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை போன்களை பயனர்கள் கட்டண சந்தா அடிப்படையில் பெற்று பயன்படுத்தலாம். ஐபோன் 17 போனுக்கான மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.3,455 என உள்ளது. கிரெடிட் கார்ட் மாற்றும் கார்ட்லெஸ் ஆப்ஷன் மூலம் இதை பெறலாம். இப்போதைக்கு டெல்லி மற்றும் பெங்களூரு நகரில் இந்த சேவை முதற்கட்டமாக அறிமுகமாகி உள்ளது. படிப்படியாக பல்வேறு நகரங்களுக்கு விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங், ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களும் இந்த தளத்தில் கிடைக்கிறது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்களின் வரவேற்பை ஈர்க்கும் என BytePe நிறுவனம் எதிர்பார்க்கிறது.

SCROLL FOR NEXT