வணிகம்

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.720 உயர்வு

வேட்டையன்

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.1) ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.87,000-ஐ கடந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இருமுறை உயர்ந்துள்ளது.

இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 மற்றும் பவுனுக்கு ரூ.240 என்று அதிகரித்தது. இதனால் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,000-ஐ கடந்தது. இந்த சூழலில் இன்று பிற்பகல் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது. இதனால் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600-க்கு விற்பனை ஆகிறது.

இன்று மட்டும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,950-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.87,600-க்கும் விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT