கோப்புப் படம் 
வணிகம்

சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்

ஆனந்த்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தி தவறு என்றும், அத்தகைய பரிந்துரை எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவி வருவதை அடுத்து, அது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், "நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிப்பது தொடர்பாக பரிந்துரை எதுவும் அளிக்கப்படவில்லை.

விதிமுறைகளின்படி கார், ஜீப், வேன் அல்லது இலகு ரக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், இலகு ரக வர்த்தக வாகனம், சிற்றுந்து, பேருந்து, லாரி உள்ளிட்ட பல்வேறு வகையான 4 அல்லது அதற்கு அதிகமான சக்கரங்களை உடைய வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT