வணிகம்

ஜிஎஸ்டி வரியை குறைக்க திட்டம்: கார், மொபைல்போன், கணினி விலை குறையும்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்​திய நிதி​யமைச்​சகம் திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி கார், மொபைல்​போன், கணினி உள்​ளிட்ட பொருட்​களின் விலை கணிச​மாக குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 15-ம் தேதி டெல்லி செங்​கோட்​டை​யில் சுதந்​திர தின உரை​யாற்​றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும் என்று அறி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. பிரதமர் மோடி​யின் அறி​விப்​பின்​படி இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும். சில ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் 40% வரி விதிக்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஆட்டோ மொபைல் துறை வளரும் வரி குறைப்பு குறித்து மத்​திய நிதி​யமைச்சக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தற்​போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பு நடை​முறை​யில் 90 சதவீத பொருட்​கள் 28 சதவீத வரி வரம்​பின் கீழ் உள்​ளன. இந்த பொருட்​கள் அனைத்​தும் 18 சதவீத வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்​படும். இதன்​படி கார், பைக், சிமென்ட், ஏசி, வாஷிங் மெஷின், மொபைல்போன், கணினி உள்​ளிட்ட பெரும்​பாலான பொருட்​கள் 18 சதவீத வரம்​பின் கீழ் வரும். மின்​சார வாக​னங்​களுக்கு தற்​போது 5 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இந்த வரி விதிப்​பில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது.

ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும்​போது நாடு முழு​வதும் கார், பைக்​கு​களின் விற்​பனை கணிச​மாக அதி​கரிக்​கும். ஆட்டோ மொபைல் சந்தை அபார வளர்ச்சி அடை​யும். தற்​போது பழச்​சாறு, உலர்ந்த பழங்​கள், தயிர், நெய் உள்​ளிட்ட பொருட்​களுக்கு 12 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இவற்​றின் மீதான வரி 5 சதவீத​மாக குறைக்​கப்​படும்.

வீடு​கள் விலை குறை​யும்: சிமென்ட் உள்​ளிட்ட கட்​டு​மான பொருட்​கள் மீது தற்​போது 28 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இவை 18 சதவீத வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம் கட்​டு​மான செலவு குறை​யும். வீடு​களின் விலை​யும் குறை​யும்.

நாடு முழு​வதும் வீட்டு வசதித் துறை அபார வளர்ச்சி அடை​யும். சுகா​தார சேவை​கள் மற்​றும் ஆயுள் காப்​பீடு பிரிமி​யம் உள்​ளிட்​ட​வற்​றுக்கு தற்​போது 18 சதவீத வரி விதிக்​கப்​படு​கிறது. இவை 5 சதவீத​மாகக் குறைக்​கப்​படும். இதன்​மூலம் சுகா​தா​ரத் துறை, காப்​பீடு துறை மட்டுமல்லாமல் ஜவுளி துறை அபார வளர்ச்சி அடை​யும். இவ்வாறு மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விலை குறை​யும் பொருட்​கள்: உணவு வகைகள், காய்​க​னிகள் மற்​றும் மக்​கள் அன்​றாடம் பயன்​படுத்​தும் அத்​தி​யா​வசிய பொருட்​கள் அனைத்​தும் 5 சதவீத வரி வரம்​புக்கு கீழ் கொண்டு வரப்​படும். மேலும் மொபைல் போன்​கள், கணினிகள் உள்​ளிட்ட மின்​ணனு சாதனங்​கள், மருந்​துகள், உரங்​கள், வேளாண் விளைபொருட்​கள், கைவினை பொருட்​கள், சைக்​கிள் ஆகிய​வற்​றின் விலை​யும் கணிச​மாக குறை​யும்.

குறிப்​பாக ரூ.1,000-க்கு உட்​பட்ட ரெடிமேட் ஆடைகள், காலணி​கள் ஆகிய​வற்​றின் விலை 7 சதவீதம் வரை குறை​யும். ரூ.80,000 மதிப்​புக்கு உட்​பட்ட டிவி மற்​றும் மின்​னணு பொருட்​களின் விலை ரூ.8,000 வரை குறைய வாய்ப்பு இருக்​கிறது. இதே​போல ரூ.40,000 மதிப்​புள்ள பிரிட்ஜ் உள்​ளிட்ட வீட்டு உபயோக பொருட்​களின் விலை ரூ.4,000 வரை குறைய வாய்ப்​பிருக்​கிறது. தங்​கம், வெள்ளி நகைகளுக்கு தற்​போது 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்​கப்​படு​கிறது. இந்த வரி விதிப்​பில் எந்த மாற்​றம் செய்​யப்​ப​டாது.

விலை உயரும் பொருட்​கள்: புகை​யிலை பொருட்​கள், மது​பானங்​கள், ஆன்​லைன் விளை​யாட்டு மற்​றும் ஆடம்பர பொருட்​களுக்கு மட்​டும் 40 சதவீத வரி விதிக்​கப்​படும். சொகுசு கார், விலை உயர்ந்த பைக்​கு​களும் இந்த வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்​படும். சுருக்​க​மாக சொல்​வதென்​றால் பணக்​காரர்​கள் பயன்​படுத்​தும் ஆடம்பர பொருட்​கள் மற்​றும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்​கும் போதை பொருட்​கள் அனைத்​துக்​கும் 40 சதவீத வரி விதிக்​கப்​படும்.

ஜிஎஸ்டி வரி விகித மாற்​றத்​தின்​போது போலி நிறு​வனங்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழி​வகை செய்​யப்​படும். கடந்த ஆண்டு போலி நிறு​வனங்​கள் மூலம் ரூ.1,000 கோடி வரை மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது. இதை தடுக்க அதிதீ​விர நடவடிக்கை எடுக்​கப்​படும். இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி வி​தித்​திருப்​ப​தால் பல்​வேறு பொருளா​தார சவால்​கள் எழுந்து உள்​ளன. இந்த சூழலில் ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் உள்நாட்டு சந்தை அபரிதமிதமான வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளரும்.

SCROLL FOR NEXT