வணிகம்

நீங்கள் விரும்பும் காரை நீங்களே வடிவமைக்கலாம்: டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

செய்திப்பிரிவு

பொதுவாக நீங்கள் விரும்பும் பொருளை உங்களுக்கு விரும்பமான வடிவில் நீங்களே வடிவமைத்துக் கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்.

பொதுவாக பள்ளி மாணவர்கள் சிறிய பொருள்களை தாங்களே வடிவமைத்துக் கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும் டூ இட் யுவர்செல்ஃப் (டிஐஒய்) எனப்படும் இந்த முறையில் இப்போது பல விதமான பொருள்களை வடிவமைத்துக் கொள்ள இணையதளத்திலேயே வசதிகள் வந்துவிட்டன.

ஆனால் கார் போன்ற வாகனங்கள் ஏற்கெனவே நிறுவனம் தயாரித்து வைத்த மாடலில் ஓரளவு உங்களுக்கு பொருந்தும் வகையிலானதை தேர்வு செய்யும் வசதிதான் உள்ளது. அதையும் சற்று மாற்றி உங்களுக்கு விருப்பமான வகையில் காரை வடிவமைத்துத் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஹாரியர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவர உள்ளது. 5 பேர் பயணிக்கும் வகையிலான இந்த எஸ்யுவி மாடலில் உங்களுக்கு விரும்பமான மாற்றங்களை செய்து கொள்ளும் வசதியை டாடா மோட்டார்ஸ் ஏற்படுத்தித் தர உள்ளது.

 இதற்கென முப்பரிமாண தோற்றம் உடைய காரின் முகப்பு தோற்றத்தை அளிக்கும் செயலி ஒன்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.இதன் மூலம் பவர் டிரெய்ன், பிரேக், சஸ்பென்ஷன் வகைகள், இருக்கைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப செய்யக்கூடிய மாற்றங்கள் குறித்த விவரமும் இந்த செயலியில் இடம்பெறும். அதை வாடிக்கையாளர் தேர்வு செய்து அளித்தால், அதில் குறிப்பிட்டுள்ளபடி கார் தயாராகி வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும்.

வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப வாகனங்களைத் தயாரித்து அளிக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் நீண்ட கால இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜேந்திர பெட்கர் தெரிவித்துள்ளார்.

ஹாரியர் எனப்படும் இந்த புதிய மாடல் எஸ்யுவி அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகமாகலாம். வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப மாற்றம் செய்யும் இந்த மாடல் ஒமேகா வடிவமைப்பு என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. டாடா மோட்டார்ஸின் பொறியியல் குழு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். இது ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள டாடா மோட்டார்ஸின் இ-குரு செயலியைப் போன்று அனைத்து இயங்குதளங்களிலும் செயல்படக் கூடியதாக இருக்கும்.

இதன்படி விற்பனையகத்துக்கு வரும் வாடிக்கையாளரிடம் காரில் எத்தகைய மாறுதல்கள் செய்ய முடியும் என்பதை அங்குள்ள விற்பனை பிரதிநிதி விளக்குவார். அதன்பிறகு வாடிக்கையாளருக்கென பிரத்யேக எண் உருவாக்கப்படும். அதன் அடிப்படையில் அவர் வாங்க விரும்பும் காரில் எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறாரோ அவை பதிவு செய்யப்படும். இதையடுத்து காருக்கான முன் பதிவு மற்றும் பணம்செலுத்தும் முறை உள்ளிட்ட விவரங்கள் மேற்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து அந்த விவரங்கள் டாடா மோட்டார்ஸின் ஆலைக்கு அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.

SCROLL FOR NEXT