வணிகம்

பரிவர்த்தனை இல்லாத ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகள் மூடலா? - மத்திய அரசு மறுப்பு

சாந்தகுமார்

புதுடெல்லி: பரிவர்த்தனை இல்லாத பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளை மூடுமாறு வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையானது பரிவர்த்தனை இல்லாத பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்குகளை முடுமாறு வங்கிகளை கேட்டுக் கொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. அதுபோன்று, கணக்குகளை மூடுவதற்காக வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

ஜன் தன் வங்கி கணக்கு திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களை வலுவாக செயல்படுத்த நாடு முழுவதும் நிதி சேவைகள் துறை ஜூலை 1 முதல் மூன்று மாத பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது வங்கிகள் நிலுவையில் உள்ள கணக்குதாரர்களின் சுய சரிபார்ப்பு விவரங்களை மீண்டும் (re-KYC) கோருகிறது.

பரிவர்த்தனையில் இல்லாத பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை நிதி சேவைகள் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், அவர்களின் கணக்குகளை செயல்பட வைக்க அந்தந்த கணக்கு வைத்திருப்பவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், பரிவர்த்தனையில் இல்லாத பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகள் பெருமளவில் மூடப்பட்டதாக தகவல்கள் எதுவும் துறையிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT