கோப்புப் படம் 
வணிகம்

சிபில் ஸ்கோர் கேட்பது ஏன்? - மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம்

செய்திப்பிரிவு

திருச்சி: கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க சிபில் ஸ்கோர் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிபில் ஸ்கோர் குறித்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி விளக்கம் அளித்தார்.

திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து, கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க சிபில் ஸ்கோர் கேட்கும் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர். மேலும், வங்கிகளில் கடன் நிலுவை இல்லை என்ற சான்று வழங்கவும் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

அவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தா.அரசு பதிலளித்து பேசும்போது, “கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுவதில்லை. வழக்கமான நடைமுறைப்படியே கடன் வழங்கப்படுகிறது.

வங்கிகளில் விவசாயிகள் பெறும் பயிர்க் கடன்களுக்கு அரசு 7 சதவீத வட்டிச்சலுகை வழங்குகிறது. எனவே, ஒரு வங்கியில் சலுகை பெற்றுவிட்டு, மற்றொரு வங்கியில் கடன் பெற்றால் மீண்டும் சலுகை கிடைக்காது என்பதை உறுதி செய்யும் விதமாக, வேறு ஏதேனும் வங்கியில் கடன் உள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்காகவே சிபில் ஸ்கோர் கேட்கப்படுகிறது.

மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வரப்பெற்ற சுற்றறிக்கையில் குறிப்பிட்ட வாசகங்களுக்கு தெளிவான விளக்கம் கேட்டு, ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படும். எந்தவித நிபந்தனையும் இல்லாமல், அடமானமும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. விவசாய கடன்களுக்கு ஒரு நபர் ஜாமீன்தார் மட்டுமே கேட்கப்படுகிறது. வேறு எதுவும் கேட்கப்படுவதில்லை” என்று அவர் பதிலளித்தார்.

ஆனால், அவரது விளக்கத்தை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து, ஆட்சியர் சரவணன் பேசியபோது, “ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் போதிய விளக்கம் இல்லை என கூட்டுறவுத் துறையினர் கருதுகின்றனர். எனவே, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பி விளக்கம் பெற்று, அந்த நடைமுறையை பின்பற்றி கடன் வழங்கப்படும். அதேபோல, சிபில் ஸ்கோர் கோருவது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து விலக்கு பெறவும் ஆவன செய்யப்படும்” என உறுதியளித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று, விவசாயிகள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

SCROLL FOR NEXT