வணிகம்

‘ஊகம் மட்டுமே’ - ஆர்சிபி அணி விற்பனை குறித்த தகவலுக்கு மறுப்பு

வேட்டையன்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்பனை செய்வதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது அந்த அணியின் உரிமையை தன்வசம் வைத்துள் Diageo. இந்நிறுவனம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் அந்த பங்குச் சந்தையின் கண்காணிப்புத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது அந்நிறுவனம். தங்கள் அணியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஊகம் மட்டுமே என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

“ஆர்சிபி அணியை விற்பனை செய்ய திட்டம் என வெளியான தகவல் வெறும் ஊகம் மட்டுமே. எங்கள் நிறுவனம் அது தொடர்பாக எந்தவொரு விவாதத்தையும் முன்னெடுக்கவில்லை. இதை தங்களது தகவலுக்காக தெரிவித்து கொள்கிறோம்” என பங்குச் சந்தை ஒழுங்குமுறை தரப்புக்கு Diageo நிறுவன செயலாளர் மிட்டல் சங்வி தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி விற்பனை தொடர்பான தகவல் வெளியானதில் இருந்து அந்நிறுவனம் பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. இந்த சூழலில் மும்பை பங்குச் சந்தை இது தொடர்பாக Diageo நிறுவனத்தின் வசம் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டதாக தகவல். அதற்கு தான் அந்நிறுவனம் இந்த பதிலை தந்துள்ளது.

கடந்த 3-ம் தேதி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி அணி. அந்த கடந்த 2008-ம் ஆண்டு சீசன் முதலே ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. அந்த அணியை விஜய் மல்லையா நிறுவினார். பின்னர் அதை Diageo வசம் அவர் கைமாற்றி இருந்தார்.

பெங்களுருவில் கடந்த 4-ம் தேதி அன்று ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT