வணிகம்

உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்தது விமான போக்குவரத்து துறை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறை உலக அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) இயக்குநர் (இந்தியா, நேபாளம், பூடான்) அமிதாப் கோஸ்லா கூறியதாவது:

உலக அளவில் அதிக அளவிலான பயணிகளை கையாளும் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இந்தியாவில் வேலைவாய்ப்பு, பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் விமான போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விமானப் போக்குவரத்துத் துறையின் பங்கு 1.5% ஆக உள்ளது. இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் 77 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளது. கடந்த 2023-ல் இந்திய பொருளாதாரத்தில் இத்துறையின் பங்கு ரூ.4.57 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் இந்தியர்கள் அதிகபட்சமாக 1.37 கோடி பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்துள்ளனர்.

விமான நிறுவனங்கள் தேவைக்கேற்ப விமான சேவையை அதிகரித்தன. 2024-ம் ஆண்டில் 13 லட்சம் விமான சேவைகள் இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலானவை (11 லட்சம்) உள்நாட்டு விமான சேவை ஆகும். 2014-ல் உள்நாட்டு விமான சேவை 6.13 லட்சமாக இருந்தது. உள்நாட்டு விமான சேவையில் 53 சதவீதத்துடன் இண்டிகோ நிறுவனம் முன்னிலை வகித்தது. இத்துறையில் போட்டி அதிகரித்ததால் பயணிகள் விமானக் கட்டணமும் 2011-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ல் 25% குறைந்தது. நாடு முழுவதும் இப்போது 116 விமான நிலையங்கள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT