வணிகம்

ஏக்கருக்கு ரூ.4,000 - டெல்டா மாவட்டங்களில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் நடப்பாண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்ததால், பம்புசெட் மூலம் மட்டுமே குறைவான பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர்.

அவ்வாறு குறுவை சாகுபடியை செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டு அவர்களுக்கு உயிர் உரங்கள், ரசாயன உரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. குறுவை சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதால், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு, ரசாயன உரங்களுக்கு பதிலாக வரிசை நடவு எனப்படும் இயந்திர நடவை ஊக்கப்படுத்தும் வகையில், இயந்திர நடவு பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நிகழாண்டும் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும். மேலும், உயிர் உரங்கள், நுண்ணுட்ட சத்துக்கள் மற்றும் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இயந்திர நடவு செய்துள்ள விவசாயிகள் உழவன் செயலியில் இதற்கான முன்பதிவை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியது: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு, குறுவை சாகுபடியை ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்த திட்டத்தில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 1 ஏக்கர் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 32,500 ஏக்கருக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலான பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அதற்கான அடங்கல் சான்றை பெற்று பதிவு செய்தால், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் அதற்கான மானியங்கள் வழங்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT