வணிகம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்.15 வரை அவகாசம் நீட்டிப்பு

வேட்டையன்

புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித் துறை. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதை அப்லோடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

“வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள், சிஸ்டம் மேம்பாடு மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் எல்லோருக்கும் துல்லியமான வருமான வரி கணக்கு தாக்கல் அனுபவத்தை உறுதி செய்யும். இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வரும்” என்று எக்ஸ் தளத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான மென்பொருள் சார்ந்த அம்சங்களை அரசு வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டை பட்டைய கணக்கர்கள் சமூக வலைதளங்களில் முன்வைத்தனர். இது சர்ச்சையான நிலையில், தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை 31-ம் தேதி தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT