பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்களின் எண்ணிக்கை 4 சதவீதம் அளவில் இருக்கிறது என்று கெய்தான் அண்ட் கோ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி பட்டியலிடப்பட்ட 1,470 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் 350 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் எண்ணிக்கை 8,640 ஆக இருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நிலைமையில் 300 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் இருக்கும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிறுவனச் சட்டம் சொல்கிறது. இதற்கான கெடு வரும் அக்டோபர் 1-ம் தேதியுடன் முடிகிறது.
பார்சூன் 500 நிறுவனங்களில் இரண்டு ரிலையன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய இந்திய நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் தலா ஒரு பெண் இயக்குநர் மட்டுமே இருக்கிறார்கள். இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பெரிய 200 நிறுவனங்களில், ஐந்தில் ஒரு பங்கு நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை.
பிரான்ஸ், இத்தாலி, நார்வே போன்ற நாடுகளில் இயக்குநர் குழுவில் பெண்கள் இருப்பதை கட்டாயமாக்கி இருக்கின்றன. நார்வே நாட்டு நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் பங்கு 41 சதவீதமாக இருக்கிறது. 2003-ம் ஆண்டு இது 7 சதவீதமாக இருந்தது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இதுபோன்ற ஒதுக்கீடு ஏதும் இல்லை. அக்டோபர் 1-ம் தேதிக்குள் 966 பெண் இயக்குநர்கள் இந்தியாவில் நியமிக்கப்பட வேண்டும்.