‘கிரெடாய்’ அமைப்பின் தமிழ்நாடு தலைவர் எஸ்.ஹபிப் மற்றும் கிரெடாய் தமிழ்நாடு செயலர் ஸ்ரீகுமார் 
வணிகம்

135 நகரங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’ அரசு விரைவில் உருவாக்க வேண்டும்: ‘கிரெடாய்’ தமிழ்நாடு தலைவர் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 135 நகரங்கள், சிறு நகரங்களுக்கான மாஸ்டர் பிளான்களை தமிழக அரசு விரைவில் உருவாக்கி தரவேண்டும் என கிரெடாய் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’ அமைப்பின் தமிழ்நாடு தலைவர் எஸ்.ஹபிப், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2025-27-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் கிரெடாய் அமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே உள்ள 10 மண்டலங்களுடன் சிவகங்கை, வேலூர், கரூர், நீலகிரி, தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களிலும் கிரெடாய் அமைப்பு தொடங்கப்பட உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து ரியல் எஸ்டேட் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துபாய், அபுதாபி, மஸ்கட், ரியாத், தோஹா, சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ‘ஃபேர் ப்ரோ’ கண்காட்சி நடத்த முடிவு செய்துள்ளோம்.

தமிழகத்தை 2032-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கான பயணத்தில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஏனென்றால், தமிழகத்தின் ஜிடிபியில் 7 முதல் 8 சதவீதம் ரியல் எஸ்டேட்டின் பங்கு உள்ளது. ரியல் எஸ்டேட் ஆதரவில் 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

ஒரு நகருக்கு மாஸ்டர் பிளான் சரியாக இருந்தால்தான், அந்த நகரின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப கட்டமைப்புகளை உருவாக்கலாம். நெரிசலை தவிர்க்கலாம். சென்னை போன்ற நகரங்களுக்கு மாஸ்டர் பிளான் சரியாக இருந்திருந்தால், எவ்வளவோ நெருக்கடிகளை குறைத்திருக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள 135 நகரங்கள், சிறு நகரங்களுக்கான மாஸ்டர் பிளான்களை தமிழக அரசு உருவாக்குவதாக அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படாததால், திட்டங்களை உருவாக்குவது தள்ளிக்கொண்டே போகிறது. எனவே, அரசு இதை விரைவில் உருவாக்கி தரவேண்டும். துபாய் போன்ற நாடுகளில் அனைத்து தகவல் பிளான்களும் ஒரே தாளில் கிடைத்து விடுகின்றன. ஆனால், இங்கு ஒவ்வொரு துறையாக செல்ல வேண்டி உள்ளது.

இதுதவிர கட்டிடங்களுக்கான ஒப்புதல் கிடைத்தும், அதற்கான திட்டங்கள் கிடைப்பதில் தாமதம், பதிவு செய்வதில் புதுப்புது விதிமுறைகளால் தாமதம், மின் இணைப்பு வழங்குவதில் தாமதம், மின்மாற்றி, மீட்டருக்கு தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால், 400 அபார்ட்மென்ட் கட்டுவதற்கு ஒப்புதல் பெறவே ஒன்றரை ஆண்டு ஆகிவிடுகிறது. இவற்றை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கிரெடாய் தமிழ்நாடு செயலர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT