நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டுக்கு வருமானம் ஈட்டும் 65,000 நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இதில் சுமார் 50,000 நிறுவனங்கள் முறையான தலைமை நிதி அதிகாரிகள் (சிஎப்ஓ) இல்லாமல்தான் செயல்பட்டுவருகின்றன. இந்த இடைவெளியை புரிந்துகொண்டு நிறுவனங்களுக்கு தேவையான நிதி அதிகாரிகளை அவுட்சோர்ஸ் செய்யும் வேலையை செய்கிறது வெல்த் ட்ரீ நிறுவனம்.
100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தலைமை நிதி அதிகாரிகளை இந்த நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான தீபக் நாராயணன் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். இந்த நிறுவனத்துக்கான ஐடியா, இந்த துறைக்கான தேவை உள்ளிட்ட பல விஷயங்களை பேசினோம். அதிலிருந்து...
உங்களது ஆரம்பகாலம் மற்றும் இந்த பிஸினஸுக்கான ஐடியா குறித்து?
அப்பாவுக்கு வங்கி வேலை என்பதால் பல இடங்களில் படிக்க வேண்டி இருந்தது. சி.ஏ. முடித்தேன். டெலாய்ட் (deloitte) மற்றும் எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் வேலை செய்தேன். பல வெளிநாட்டு நிறுவனங்கள் 2007-ம் ஆண்டு இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள்.
அவர்களுக்கு அலுவலகம், நிலம், தேவையான ஆட்கள், நிறுவனங்களை இணைத்தல், அரசாங்க அனுமதி உள்ளிட்ட பல விஷயங்கள் தேவைப்பட்டன. அவற்றை செய்துகொடுப்பதற்கான நிறுவனமாகத்தான் ஆரம்பித்தோம். அப்போது சிஎப்ஓ பற்றிய எண்ணமே எங்களுக்கு (இன்னொரு நிறுவனர் வெங்கட்) இல்லை.
சி.எப்.ஓ.களை அவுட்சோர்ஸ் செய்யும் திட்டம் எப்படி வந்தது?
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான விஷயங்களை செய்வதற்கு பல இந்திய நிறுவனங்களுடன் பேச வேண்டி இருந்தது. அப்போதுதான் சில விஷயங்கள் புரிய வந்தது. இந்தியாவில் 95 சதவீத நிறுவனங்கள் குடும்பத்தினர் நடத்தும் வியாபாரமாகத்தான் இருந்தது. பல இடங்களில் நிதிப்பிரிவை கவனிக்க ஆட்கள் இல்லை. அதனால் நிதி அதிகாரிகளை குறுகிய காலத்துக்கு கொடுக்கிறோம். நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வசதியாக இருக்கும் என்று பல நிறுவனங்களின் புரமோட்டர்களிடம் பேசினோம்.
தலைமை நிதி அதிகாரியை அவுட்சோர்ஸ் மூலம் நியமனம் செய்ய எப்படி புரமோட்டர்கள் ஒப்புக்கொண்டார்கள்? என்னிடம் வேலையில் இல்லாத ஒரு நபரிடம் அனைத்து தகவலையும் ஏன் கொடுக்க வேண்டும் என்று புரமோட்டர் கேட்கவில்லையா?
நிறைய பேர் கேட்டார்கள். ஆனால், வேலையில் இருப்பவர்கள் கூட தகவல்களை தவறாக பயன்படுத்தலாமே. இந்த ரிஸ்க் என்பது நபர்களை பொறுத்தது. எங்களது பிஸினஸே நம்பிக்கை அடிப்படையில்தான். எதாவது நடக்கும்போது எங்களது மொத்த பிஸினஸே பாதிக்கப்படும். மேலும் சட்டப்பூர்வமாக பலவிதமான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் 10ல் இரண்டு பேர்தான் ஒப்புக்கொண்டார்கள். இப்போது 10ல் இரண்டு பேர் வேண்டாம் என்கிறார்கள்.
ஒரு சி.எப்.ஓ-வின் தேவையை புரமோட்டர் புரிந்துகொண்ட பிறகு உங்களிடம் ஏன் அவுட்சோர்ஸ் கேட்கவேண்டும். அவரே ஒருவரை நியமனம் செய்துவிட மாட்டாரா?
வளர்ந்து வரும் நிறுவனங்களில்தான் நாங்கள் வேலை செய்கிறோம். இப்போது ரூ.100 கோடியாக இருக்கும் நிறுவனம் சில வருடங்களில் ரூ.300 கோடிக்கு மேல் சென்றுவிடும். அப்போது அந்த சி.எப்.ஓ.வால் நிர்வாகம் செய்யமுடியாது. ஆனால் எங்களிடம் பல வகையான விஷயங்களை கையாளக்கூடிய நபர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் வரும்போது நிறுவனங்களுக்கு பலவகையான வாய்ப்பு கிடைக்கும். மேலும் நிறுவனங்களுக்கு 10 வகையான தேவை இருக்கலாம். ஐ.பி.ஓ. வெளியிடுவது, கடன் வாங்குவது என பல. ஆனால் ஒரு சி.எப்.ஓ. அனைத்து விஷயங்களில் எக்ஸ்பர்ட்டாக இருக்க மாட்டார்.
உதாரணத்துக்கு ஐபிஓ வெளியிடுவதற்காக ஒருவரை நியமித்தால், ஐபிஓவுக்கு பிறகு அவர் என்ன செய்வார். ஆனால் ஒவ்வொரு தேவைக்கும் எங்களிடம் எக்ஸ்பர்ட்கள் இருப்பதால் நிறுவனங்களின் சுமை குறையும். நாங்கள் குழாய் தண்ணீரை போல, தேவைப்பட்டால் எங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லை என்றால் மூடிவிடலாம். ஆனால் நிரந்தரமாக ஒருவரை நியமிக்கும்போது இவ்வளவு வாய்ப்புகள் கிடையாது.
ஆடிட்டிங் முடித்த ஒருவர் நேரடியாக ஒரு நிறுவனத்தில் சேராமல், உங்கள் நிறுவனத்துக்காக வேலை செய்ய எப்படி முன்வருகிறார்கள்?
எவ்வளவு தகுதி இருந்தாலும் சிஎப்ஓ ஆவதற்கு வயது ஒரு குறையாக இருக்கும். இல்லை, எதாவது இடத்துக்கு மேல் செல்ல முடியாமல் அலுவலகத்தில் தடை இருக்கும்.
ஏற்கெனவே சி.எப்.ஓ வாக இருந்தவர்கள் கூட எங்களிடம் வருகிறார்கள். காரணம் அவர்கள் இருப்பது சிறிய கம்பெனி. அதற்குமேல் அவர்களுக்கு வாய்ப்புகளும் இல்லை, சவால்களும் இல்லை. இவர்களை போல இருப்பவர்கள் எங்களிடம் வருவார்கள்.
உங்களிடம் வருபவர்கள் சிஎப்ஓ ஆக இருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு பெரிய நிறுவனங்களை நோக்கி சென்றுவிட மாட்டார்களா?
அந்த ரிஸ்க் இருக்கிறது. ஆனால் இதுவரை நடக்கவில்லை. ஊழியர்கள் வெளியேறுவது என்பது இப்போது பெரிய பிரச்சினை. இதை தடுக்க முக்கியமான நபர்களுக்கு நிறுவனத்தின் பங்குகளை கொடுத்திருக்கிறோம்.
சிஎப்ஓ என்பவர் எண்களுடன் விளையாடுபவர்கள். அவர்களுக்காக நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதையும் எவ்வளவு அவர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்பது தெரியும். இதேபோல அவர்களும் ஆரம்பித்துவிட்டால்?
இப்படி நினைத்ததால்தான் நான் ஆரம்பித்தேன். ஆனால் அத்தனை பேராலும் ஆரம்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. இது பெரிய ரிஸ்க். வாடிக்கையாளர்களை பார்ப்பது, அலுவலகம் அமைப்பது என பல சிக்கல்கள் இருக்கிறது. வேலை செய்தால் 31-ம் தேதி சம்பளம் கிடைக்கும்.
ஆனால் பிஸினஸ் செய்தால், உங்களுக்கு வரவேண்டிய பணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதற்கு வொர்க்கிங் கேபிடல் வேண்டும். மலை உச்சியை நோக்கி நிறைய நபர்கள் வருகிறார்கள். பலர் ஆழத்தை பார்த்து மீண்டும் வேலைக்கு போகிறார்கள். சிலர் குதித்து தொழில்முனைவோராகிறார்கள்.
karthikeyan.v@thehindutamil.co.in