புனே: புதுமை தொழில்நுட்பத்தில் உருவான நாட்டின் முதல் 3டி பிரின்ட் கான்கிரீட் பங்களாவை புனேவில் கோத்ரேஜ் ப்ராப்பெர்ட்டீ்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஒவ்வொரு செங்கலாக எடுத்து வைத்து வீடு கட்டும் முறையெல்லாம் மாறி, 3டி பிரின்ட் முறையில் கான்கிரீட் கலவையால் வீடு அச்சிடப்படும் புதுமை தொழில்நுட்பம் வந்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த ட்வாஸ்டா இன்ஜினியரிங் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து, கோத்ரேஜ் ப்ராப்பெர்டிஸ் நிறுவனம் புனேவில் 3டி பிரின்ட் பங்களாவை கட்டியுள்ளது. இந்த வீட்டின் வீடியோவை இஸ்டாகிராமில் வெளியோகி காண்போரை கவர்ந்து வருகிறது.
2038 சதுர அடியில் உருவாக்கப்பட்ட இந்த வீட்டின் கட்டுமானம் 4 மாதத்தில் முடிந்துள்ளது. ‘‘இந்த வீடு கட்டப்படவில்லை. மிகப் பெரிய அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி, கான்கிரீட் கலவை மூலம் இந்த வீடு அச்சிடப்பட்டுள்ளது’’ என்கிறார் இதன் திட்ட இயக்குனர். கட்டிட வடிவமைக்கு ஏற்றபடி கான்கிரீட் கலவையை நிரப்பி இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற சுவர்களில் இரண்டு அடுக்குகள் உள்ளன. இதன் நடுவே இருக்கும் இடைவெளி மூலமாக பைப்கள், வயர்கள் பொருத்தப்படுகிறன. இந்த 3டி பிரின்ட் சுவர்கள் வீட்டிற்குள் வெப்பநிலையை சீராக வைக்கிறது. இதன் மூலம் மின்சார உபயோகமும் குறையும். இந்த புதுமையான 3டி பிரின்ட் தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் நவீன வீடுகளை கட்ட உதவுகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள், 3டி பிரின்ட் தொழில்நுட்பம் வியக்கவைக்கிறது என புகழ்கின்றனர்.