வணிகம்

ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் ஒரு பவுன் ரூ.66,880 என புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், நேற்று ஒரு கிராம் ரூ.65 அதிகரித்து ரூ.8,425-க்கும், ஒரு பவுன் ரூ.67,400-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.73,520-க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க அரசு பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டம் ஏப்.2-ம் தேதி (நாளை) முதல் அமல்படுத்த உள்ளது.

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உள்ள நாடுகள் தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களை விற்றுவிட்டு, தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து வருகிறது.

இத்தகைய காரணங்களால், தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு வரும் நாட்களிலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனையானது.

SCROLL FOR NEXT