சென்னை கிண்டியில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பல்நோக்கு மையம் கட்டப்படவுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி, நாகிரெட்டி தோட்டம், அருளையியம்மன்பேட்டையில் வருவாய் துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தென் சென்னை பகுதியின் மையப் பகுதியாக உள்ள இந்த இடம், வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு இடமாகும். இந்த இடத்தை எப்படியாவது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதல்வரிடம் சுகாதாரத் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் சமூக நலம் சார்ந்த நிகழ்ச்சி நடத்துவதற்கும் சமுதாயக்கூடம் இல்லை.
இங்கு குறைந்தது 2 ஆயிரம் நபர்களாவது பங்கேற்பதற்கான இடவசதியும், அதேபோன்று திருமணங்கள் நடத்தவும், 2 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் வசதியுடன் கூடிய கட்டப்பட உள்ளது. தாம்பரம் முதல் சைதாப்பேட்டை வரை உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இந்த பல்நோக்கு மையம் பயனுள்ளதாக இருக்கும். இதைக் கட்டுவதற்கான நிதி சிஎம்டிஏ-வில் இருந்து பெறப்படும்.
இங்கு நான்கு பகுதிகளுக்கும் செல்லும் அளவுக்கு ஏற்கெனவே சாலைகள் உள்ளன. பிரமாண்டமான கட்டிடம் கட்டும்போது இந்த சாலைகளும் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.