கோவை: ‘சமாதான்’ திட்டத்திற்கான காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, ஜிஎஸ்டி ஆணையரிடம் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னவேடம்பட்டி தொழில்கள் சங்கத்தினர் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆணையரை நேற்று மார்ச்(26-ம்தேதி) சந்தித்து, ‘சமாதான்’ திட்டம் தொடர்பாக கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த சந்திப்பு குறித்து அவ்வமைப்பின் தலைவர் தேவகுமார் நாகராஜன் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் கடந்த 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ‘சமாதான்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உள்ள ஜிஎஸ்டி சார்ந்த தொழில்துறையினர் பிரச்சினைகளுக்கு(அபராதம், வட்டி செலுத்ததல் தொடர்பான) தீர்வு காண வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான காலக்கெடு நடப்பாண்டு மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தொழில்துறையினர் நடப்பாண்டுக்கு செலுத்த வேண்டிய தொகை அதிகமாக உள்ளதால் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ‘சமாதான்’ திட்டத்திற்கான காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஜிஎஸ்டி சட்டம் 128 ‘ஏ’ பிரிவில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 2020-21,22,23 ஆகிய நிதி ஆண்டுகளுக்கும் சமாதான் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கோவை ஜிஎஸ்டி ஆணையரிடம் இது தொடர்பாக நேரில் வலியுறுத்தி, கோரிக்கை கடிதத்தை வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.