புதுடெல்லி: இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் ரசித்து பருகும் பிரபல பானமான கோலி சோடா தற்போது வெளிநாடுகளில் "கோலி பாப் சோடா" என்ற பெயரில் ரீபிராண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் உள்ள நுகர்வோரிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. திட்டமிட்ட விரிவாக்கம் மற்றும் புதுமையான மறுஉருவாக்கம் காரணமாக இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் எக்ஸ் பதிவில் கூறுகையில், “ பாரதத்தின் சொந்த கோலி பாப் சோடா தற்போது உலக வாடிக்கையாளர்களின் "வாவ்" ருசிக்கு திரும்புகிறது. இந்தியாவின் பாரம்பரிய கோலி சோடாவின் மறுமலர்ச்சியை உலகளவில் ஊக்குவித்ததற்காக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துக்கு (ஏபிஇடிஏ) பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் மிகப்பெரிய ரீடெயில் நெட்வொர்க்கை கொண்டுள்ள லூலூ ஹைப்பர்மார்க்கெட்டுகளில் கோலி சோடாவை தடையின்றி விநியோகம் செய்வதற்காக ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ஏபிஇடிஏ தெரிவித்துள்ளது.