இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 17-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களாக அதிகரித்தது. 2 நாள் வார விடுமுறைக்குப் பிறகு, நேற்றும் 6-வது நாளாக உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் நேற்று 1,079 புள்ளிகள் உயர்ந்து 77,984-ல் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே 78 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிப்டி 308 புள்ளிகள் உயர்ந்து 23,658-ல் நிலை பெற்றது.
வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், எரிசக்தி துறை பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன. கோட்டக் மகிந்திரா பாங்க், என்டிபிசி பங்குகள் 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.5.08 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. இந்திய பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.418.38 லட்சம் கோடியாகி உள்ளது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, பங்குகளின் விலை நியாயமான அளவில் இருப்பது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்டவையும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுக்கு காரணமாக அமைந்தது.