வணிகம்

ரூ.951 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்த 318 போலி பட்டியல் வணிகர்கள்: வணிகவரி துறை ஆய்வில் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

வணிகவரித் துறை கடந்தாண்டு நடத்திய ஆய்வில் 318 போலி பட்டியல் வணிகர்கள் ரூ.951.27 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து வணிக வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: போலிப்பட்டியல் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவரித் துறை இணை ஆணையர்களின் மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். இதன் அடிப்படையில், கடந்தாண்டு மார்ச் 14 மற்றும் ஜூலை 2-ம் தேதிகளில் வணிகவரி ஆணையரின் உத்தரவுப்படி முதல் மற்றும் 2-வது மாநில அளவிலான திடீர் செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து மார்ச் 12-ம் தேதி 3-ம் முறையாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வணிகவரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவின் மூலம் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 318 போலி பட்டியல் வணிகர்கள், ரூ.951.27 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மெட்ரோ எண்டர்பிரைசஸ் என்ற வணிக நிறுவனத்தை சென்னை நுண்ணறிவு கோட்டப் பிரிவு 2-ல் உள்ள அதிகாரிகள் ஆய்வு செய்து, ரூ.12.46 கோடிக்கு உள்ளீட்டு வரியை போலியாக பெற்று, அரசுக்கு வரிஇழப்பு ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. அந்நிறுவன உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பஷீர் அகமது ஆகியோரை மார்ச் 21-ம் தேதி கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT