வணிகம்

உலகின் நுகர்வு சந்தை தலைநகராகிறது இந்தியா: ‘ஏஞ்சல் ஒன்’ ஆய்வறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

உலகின் நுகர்வு சந்தை தலைநகராக இந்தியா உருவெடுக்கிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 'ஏஞ்சல் ஒன்' என்ற பங்கு தரகு நிறுவனம் செயல்படுகிறது. இது, பங்கு சந்தை உலகின் மிகவும் நம்பிக்கையான நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்தியாவின் நுகர்வு அளவு 56 சதவீதமாக உள்ளது. இதன்காரணமாக நாட்டின் நுகர்வு சந்தை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவின் தற்போதைய நுகர்வு, வரும் 2034-ம் ஆண்டில் இரு மடங்காக உயரும். கூட்டுக் குடும்பம், மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவை இந்திய நுகர்வு சந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் ரூ.3.3 லட்சம் கோடி அளவுக்கு நுகர்வு அதிகரிக்கும். இந்தியர்களின் சேமிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடும்போது, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியர்களின் சேமிப்பு 10 மடங்கு வரை அதிகரிக்கும். இது இந்திய நுகர்வு சந்தையின் அபார வளர்ச்சிக்கு வித்திடும்.

அமெரிக்காவில் தனிநபர் வருமானம் அதிகரித்தபோது அந்த நாட்டின் நுகர்வு சந்தை அபாரமாக வளர்ச்சி அடைந்தது. இந்தியாவிலும் இதுபோன்ற சூழல் உருவாகி உள்ளது. இந்தியர்களின் தனிநபர் வருவாய் அதிகரித்து நாட்டின் நுகர்வு சந்தை அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

குறிப்பாக வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள், தங்க நகைகள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் இன்றளவும் மளிகை கடைகள் மூலமாகவே 92 சதவீத மளிகை பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. தற்போது சில்லறை விற்பனை சந்தையில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டு வருகின்றன. இது மளிகை சந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும்.

கடந்த 1990-க்கு பிறகு பிறந்த இந்தியர்களின் எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ளது. இந்த புதிய தலைமுறை இந்தியர்கள் அதிக அளவில் செலவு செய்கின்றனர். வரும் 2035-ம் ஆண்டுக்குள் புதிய தலைமுறை இந்தியர்களின் நுகர்வு கணிசமாக அதிகரிக்கும். இதன்மூலம் உலகின் நுகர்வு சந்தை தலைநகராக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு 'ஏஞ்சல் ஒன்' நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT