சென்னை: “வரும் 2032-ம் ஆண்டுக்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை 22.8 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விஜய்குமார் சரஸ்வத் கூறியுள்ளார்.
சென்னையிலுள்ள தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தில், ‘கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள்’ எனும் தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கை, நிதி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான டாக்டர் விஜய்குமார் சரஸ்வத் இன்று (மார்ச் 17) தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்தும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
தொழில்நுட்ப பரிமாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்குகள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத் தீவுகள் நிர்வாகத்தினருக்கும், கடலில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதக்கும் வழிகாட்டி அமைப்பை (மிதக்கும் கலன்) காமராஜர் துறைமுகத்துக்கும் சரஸ்வத் வழங்கினார். ரோஷினி என்ற இந்தக் கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்கு சென்னை தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானி பூர்ணிமா ஜலிகல் என்பவரது கண்டுபிடிப்பாகும்.
இக்கருத்தரங்கில் சரஸ்வத் பேசும்போது, “இந்தியா, 7,500 கி.மீட்டருக்கும் அதிக நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. சிறப்பு நிலை பொருளாதார மண்டலம் 2.02 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. இவை நாட்டின் நீலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியா, கடலோர காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்து வருகிறது. வருங்காலத்தில் மிதக்கும் சூரிய மின்னாற்றல் தயாரிப்பு, கடலலைகள் மூலம் மின்னுற்பத்தி ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தவையாக திகழும்.
வரும் 2032-ம் ஆண்டுக்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை 22.8 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா 12.4 கிகா வாட் கடலலை மின்னுற்பத்தியுடன் சேர்த்து 54 கிகா வாட் பெருங்கடல் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ளது” என்று அவர் கூறினார். இக்கருத்தரங்கில், தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், ஆற்றல் மற்றும் நன்னீர் துறைத் தலைவர் பூர்ணிமா ஜலிகல், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.