வணிகம்

தமிழக வேளாண் பட்ஜெட் 2025-ல் மானியம், உதவித் தொகை சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன?

செய்திப்பிரிவு

சென்னை: “புரதச்சத்து மிகுந்த காளான் உற்பத்தியை பெருக்குவதுடன், புதிய தொழில் முனோவோர்களை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் ஐந்து காளான் உற்பத்திக் கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்” என்று வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கான மானியம், ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்புகள் இங்கே...

> உயிர்ம வேளாண் முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி, ஏற்றுமதி செய்ய, எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்துக்கு முழு மானியம் வழங்கப்படும்.

> பட்டியல் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களுக்கு பங்குத்தொகையினால் ஏற்படும் பொருளாதாரச் சுமையினைக் குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள 40 முதல் 50 சதவீத மானியத்துக்குப் பதிலாக 60 முதல் 70 சதவீத மானியம் வழங்கப்படும். இக்கூடுதல் மானியம், மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்காக 2025-26 ஆம் ஆண்டில் 21 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

> புரதச்சத்து மிகுந்த காளாண் உற்பத்தியை பெருக்குவதுடன், புதிய தொழில் முனோவோர்களை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் ஐந்து காளாண் உற்பத்திக் கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்.

> விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய், கனிகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்திட, 4000 நடமாடும் விற்பனை வண்டிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

> பயறு வகைப் பயிர்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பயறு வகைகளில் 100 விதை உற்பத்தித் தொகுப்புகள் அமைக்க, தொகுப்புக்கு இரண்டு லட்சம் ரூபாய் சுழல் நிதியாக வழங்கும் வகையில், 2025-26 ஆம் ஆண்டில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதில் உற்பத்தி செய்யப்படும் விதைகளை, உற்பத்தி மானியம் வழங்கி வேளாண்மைத் துறையே கொள்முதல் செய்து,வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கும்.

> சிறு, குறு விவசாயிகள், சிறிய நிலப்பரப்பில் வேளாண் பணிகளை தாங்களே மேற்கொள்ள உதவிடும் வகையில் விவசாயிகளுக்கு 7,900 பவர்டில்லர்கள் 6,000 விசை களையெடுப்பான்கள் மானியத்தில் வழங்கப்படும்.

> 2025-26 ஆம் ஆண்டில் வட்டி மானியத்துக்கென 853 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

> உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி வழங்குதல்

> 2025-26 ஆம் ஆண்டில் நெல் ஊக்கத்தொகை வழங்கிட, 525 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட மானியம் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். | வாசிக்க > விவசாயிகள் கடன் சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? | தமிழக வேளாண் பட்ஜெட் 2025 ஹைலைட்ஸ்: உழவர் நல சேவை மையங்கள் முதல் சூரியசக்தி பம்பு செட் வரை!

SCROLL FOR NEXT