ராமேஸ்வரம்: தமிழகத்தின் திருச்சியிலிருந்தும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு மார்ச் 30-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் இருந்து நடந்து வந்த விமான சேவை 1983-ல் அந்நாட்டின் உள்நாட்டுப் போரால் நிறுத்தப்பட்டது. 1990-ல் இலங்கை ராணுவத்தால் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 2009-ல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பலாலி விமானத் தளத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைப்பதற்காக அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால், பலாலியில் அந்நாட்டு ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 6,000 ஏக்கர் நிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு, அதற்காகப் பல போராட்டங்கள் நடைபெற்று வந்தால் விமானத் தளத்தை புனரமைக்கும் பணிகள் தாமதப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டுதான் பலாலி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு ராணுவத்தை அப்பகுதியிலிருந்து வெளியேற்றியது. தொடர்ந்து இந்தியாவின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, அது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2019 அக்டோபர் 17-ம் தேதி யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டு, முதற்கட்டமாகச் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டது. இதனை அலையன்ஸ் ஏர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று நாட்கள் என இயக்கியது. கரோனா பரவலுக்கு பின்பு வாரத்துக்கு ஏழு நாட்கள் என பயண சேவை அதிகரிக்கப்பட்டது.
மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவையை துவங்கி நடத்தி வருகிறது.
யாழ்பாணம் விமான சேவைக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இலங்கையின் விமான சேவை அமைச்சகம் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விமான சேவையை துவங்குவதற்காக இந்தியாவில் உள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 30-ம் தேதியிலிருந்து திருச்சியில் இருந்தும் யாழ்ப்பாணத்துக்கு விமான சேவையை துவங்க உள்ளது. இந்த விமானம் திருச்சியில் இருந்து பகல் 1.25 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். அதுபோல, யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.05 மணிக்கு திருச்சியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.