வணிகம்

செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

செய்திப்பிரிவு

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக மத்திய நிதித் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய செபி தலைவர் மாதவி புரி புச்சின் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து செபியின் புதிய தலைவராக மத்திய நிதித் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அரசாணையில், “மத்திய நிதி, வருவாய் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நீடிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்தா பாண்டே மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்ற பாண்டே, பிரிட்டனின் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய நிதித் துறை செயலாளராக அவர் பதவியேற்றார். மத்திய பட்ஜெட்டை தயார் செய்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கடந்த ஜனவரி 9-ம் தேதி வருவாய் துறையின் செயலாளராகவும் அவர் பொறுப்பேற்றார். ஏர் இண்டியா நிறுவனத்துக்கு டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ததில் துஹின் காந்தா பாண்டே முக்கிய பங்காற்றினார்.

SCROLL FOR NEXT