வணிகம்

‘பாரத் டெக்ஸ்’ சர்வதேச ஜவுளி கண்காட்சியை தமிழகத்தில் நடத்த தொழில்துறையினர் கோரிக்கை

இல.ராஜகோபால்

கோவை: இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு ஆண்டுதோறும் டெல்லியில் நடத்தி வரும் ‘பாரத் டெக்ஸ்’ கண்காட்சியை தமிழகம் அல்லது மகாராஷ்டிராவில் நடத்த வேண்டும். அப்போதுதான் சங்கிலி தொடரிலுள்ள அனைவரும் பயன்பெற வாய்ப்பு ஏற்படும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜவுளித்தொழில்துறையினருக்கு உதவும் நோக்கத்தில், மத்திய அரசு மற்றும் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ‘பாரத் டெக்ஸ்’ என்ற கண்காட்சி டெல்லியில் நடத்தப்படுகிறது. இத்தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியம் கொண்ட மாநிலங்களில் நடத்தினால் மட்டுமே மத்திய அரசின் முயற்சிக்கு சிறந்த பயன் கிடைக்கும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மறுசுழற்சி ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறியதாவது: மத்திய அரசு ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்தில் சீனா, துருக்கி போன்ற மேலை நாடுகளில் நடத்துவது போல் உலகத்தரம் வாய்ந்த ‘பாரத் டெக்ஸ்’ என்ற சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் இத்தொழிலில் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிரா அல்லது தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தமிழகத்தில் நடத்துவதே சரியாக இருக்கும்.

இந்த கண்காட்சி ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள அனைத்து தொழில்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது. ஆனால் இன்றைய சூழலில் டெல்லியில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்பதில் சிறு, குறு தொழில்துறையினருக்கு பல பிரச்சினைகள் உள்ளன. எனவே கண்துடைப்புக்காக நடத்துவதை தவிர்த்து எதிர்வரும் ஆண்டுகளில் தமிழகம் அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த கண்காட்சியை நடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பின், இணை ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் கூறியதாவது: ஜவுளித்துறையினர் மேம்பாட்டுக்காகவும் வளர்ச்சிக்காகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு மற்றும் ஜவுளித்துறை சார்பாக ‘பாரத் டெக்ஸ்’ ஜவுளி கண்காட்சியை டெல்லியில் நடத்தி உள்ளது.

முதல் கண்காட்சி இந்தியாவின் தலைநகரில் நடைபெற்றது என்பது அறிய வேண்டும் என்பதற்காக நடத்தி இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறையும் புதுடெல்லியை தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஜவுளித்துறையினர் மத்தியில் அதிகளவு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி என்பது உற்பத்தியாளர்களையோ உற்பத்தி செய்யும் தொழிற்சாலையோ இல்லாத இடமாக உள்ளது. ஜவுளித்துறை பொறுத்தவரை இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத்,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

டெல்லியில் நடக்கும் நிகழ்வில் பெரும்பாலான விசைத்தறியாளர்கள் சென்று பார்வையிட முடியாத சூழல் ஏற்படுகிறது. காரணம் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் பயணம் சென்று பார்வையிட வேண்டும், ரயிலில் பயணம், தங்கும் வசதி மற்றும் இதர செலவுகளுக்கு பல ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது. அதேபோல் கண்காட்சியில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே அதிகம் கலந்து கொள்ளும் வகையில் அரசு அரங்க வாடகையை நிர்ணயித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 25 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. எட்டு லட்சம் விசைத்தறிகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஜவுளித்தொழிலில் 1.92 கோடி ஸ்பிண்டல் திறன், 8 லட்சம் ரோட்டார் திறன் கொண்டு நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. நெசவு சார்ந்த தானியங்கி தறிகள் பெரும்பாலும் மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் தான் அதிகம் இயங்குகின்றன.

எனவே வரும் காலங்களில் பாரத் டெக்ஸ் கண்காட்சியை, தமிழகத்தில் கோவையிலும், அதனைத் தொடர்ந்து மும்பை, அகமதாபாத் போன்ற ஜவுளி சார்ந்த நகரங்களில் நடத்தவும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் வாடகை நிர்ணயிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT