சென்னை: உலக நாடுகளிடையே இந்தியாவின் அரசியல் பலத்தை அதிகப்படுத்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதி நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மின்னணு தொழில்கள் சங்கத்தின் சார்பில் ‘இந்தியாவின் மின்னணு பொருட்களுக்கான விநியோக சங்கிலி’ குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்தியாவில் மின்னணு பொருட்களுக்கான விநியோக சங்கிலியை மேம்படுத்துவது, மின்னணுவியல் துறைக்கான மதிப்பு கூட்டலை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு 2 நாட்கள் நடத்தப்பட்ட கருத்தரங்கில் தைவான், சிங்கப்பூர், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன.
அதேபோல் கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றிருந்தன. மின்னணு பொருட்களுக்கான விநியோக சங்கிலி தொடர்பான அமர்வுகளில் 35 முன்னணி தொழில்நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் உரையாற்றினர். அந்த வகையில் மொத்தமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடக்க நாளில் கலந்து கொண்டு மாநாடு மற்றும் கண்காட்சியை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-ம் நாள் அமர்வுகளில் தமிழக அரசின் சார்பில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தேசிய அளவில் தொழில்துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற முதன்மையான நிகழ்வை தமிழகத்தில் ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இன்றைய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காலகட்டத்தில் மின்னணுவியல் மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.
உலகளவில் நிலவிவரும் போட்டி, புவிசார் அரசியல் அமைப்புகளின் எதிர்காலம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு மின்னணுவில் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது. இதன்மூலம் நவீன தொழில்நுட்பங்களில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறமுடியும்.
அதேபோல் மின்னணு உபகரணங்களின் உற்பத்தி மூலம் தேசத்தை வலிமைப்படுத்துவதன் வாயிலாக நமது குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாக்கப்படும். எனவே மின்னணுவியல் துறையில் நமது போட்டித் திறனை மேம்படுத்தி, இந்தியாவை மின்னணு பொருட்களின் ஏற்றுமதி நாடாக நாம் மாற்ற வேண்டும்.
இந்தியாவை நிகர ஏற்றுமதி நாடாக மாற்றினால் அதுவே, நமது அரசியல் பலமாகவும் எதிர்காலத்தில் மாறும். அந்தவகையில் மென்பொருள், ஆட்டோமொபைல் தொழில்களை போல மின்னணு பொருட்கள் தயாரிப்பிலும் நம்மால் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக மாறமுடியும் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் இந்திய மின்னணு தொழில்கள் சங்கத்தின் தலைவர் சசிகுமார் கெந்தம், இடிஎம்ஏ செயல் இயக்குநர் இவான் போக்ரோவ்ஸ்கி, மெய்டி எலக்ட்ரானிஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிர்மத் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.